கே.பி.பி.சாமி 
தமிழகம்

திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி காலமானார்

செய்திப்பிரிவு

திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான கே.பி.பி.சாமி, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை காலமானார். அவருக்கு வயது 57.

திமுகவைச் சேர்ந்த கே.பி.பி.சாமி, முதன்முறையாக 2006-ம் ஆண்டு சென்னை, திருவொற்றியூர் தொகுதியிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதன்முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதே அவருக்கு, திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சர் பதவி வகிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. 2006-2011 வரை மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

தொடர்ந்து, 2011-ம் ஆண்டும் அதே தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் கே.பி.பி.சாமி தோல்வியடைந்தார். இதன்பின்னர் 2016-ம் ஆண்டு திருவொற்றியூர் தொகுதியிலிருந்து மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுகவின் மீனவர் அணி செயலாளராகவும் கே.பி.பி.சாமி இருந்து வந்தார்.

அண்மைக்காலமாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி கே.பி.பி.சாமி இன்று (பிப்.27) காலை காலமானார். அவரது உடல் கே.வி.கே.குப்பத்தில் இருக்கும் அவரின் வீட்டில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT