தமிழகம்

சேலம் -உளுந்தூர்பேட்டை இடையே 4 வழிச் சாலையில் மரக்கன்றுகள் நட வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையோரங்களில் மரக் கன்றுகளை நட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகளால் பாதிக்கப்பட்டோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சேலம்-உளுந்தூர்பேட்டை இடையே 164 கி.மீ தொலைவுக்கு ரூ.1,000 கோடி மதிப்பில் கடந்த 2009-ம் ஆண்டு நான்கு வழிச்சாலை பணி தொடங்கி 2012-ம் ஆண்டு பணி நிறைவுற்றது. இப்பணிக்காக இச்சாலையில் இருந்த நாவல், புளியன், வேம்பு, அரசன், புங்கன் உள்ளிட்ட ஒரு லட்சம் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.

இதற்கு மாற்றாக 4 லட்சம் மரக்கன்றுகளை வைக்க சாலை பணி மேற்கொண்ட தனியார் நிறுவனம் உறுதி பத்திரம் அளித்திருந்தது. நான்கு வழிச் சாலை பணி நிறைவடைந்து 9 ஆண்டுகள் கடந்த நிலையில், சாலை யோரங்களில் மரங்கள் இல்லை.

இதுகுறித்து தேசிய நெடுஞ் சாலைகளால் பாதிக்கப்பட்டோர் சங்க மாநிலத் தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:

சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை தனியார் நிறுவனம் 15 ஆண்டுகளுக்கு சுங்கம் வசூலிக்கும் உரிமையுடன், நான்கு வழிச்சாலையை அமைத்தது. சாலை பணிக்காக ஒரு லட்சம் மரங்கள் வெட்டப்பட்டன. இதற்கு மாற்றாக 4 லட்சம் மரக்கன்றுகளை நட உறுதி அளித்தது.

ஆனால், நான்கு வழிச் சாலை பணி முடிந்து 9 ஆண்டுகள் கடந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் மரங்கள் இல்லாமல், வெறிச்சோடி உள்ளது. சாலை நடுவே அரளி செடிகள் மட்டும் வைத்து பராமரித்து வரு கின்றனர்.

இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பி யிருந்தோம். இதற்கு வந்த பதிலில், 10 மீட்டர் இடைவெளியில் 2 லட்சம் மரக்கன்றுகள் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 9 ஆண்டாக இந்த 2 லட்சம் மரக்கன்று களும் துளிர்விடாமல் இருப்பதற்கான மர்மம் தெரியாமல், விவசாயிகளும், பொதுமக்களும் வேதனை அடைந் துள்ளனர்.

எனவே மரக்கன்றுகளை தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக நட்டு, முறையாக பராமரிக்க தேவையான நடவடிக்கையை தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT