திருச்சி திருவானைக்காவலில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேசுவரர் கோயிலில் நேற்று பள்ளம் தோண்டியபோது தங்கப் புதையல் கிடைத்தது.
இந்தக் கோயில் பிரகாரத்துக்குள் அகிலாண்டேஸ்வரி அம்மன் சந்நிதிக்கு நேரெதிரே வெகு காலமாக பயன்படுத்தப்படாத வாழைக்கொட்டம் என்ற இடம் உள்ளது. செடிகொடிகள் முளைத்துக் கிடந்த இந்த இடத்தில் நந்தவனம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, கோயில் உதவி ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் நேற்று அந்த இடத்தில் பள்ளம் தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது, பித்தளை வடிவ கலசம் ஒன்று கிடைத்தது. அதை எடுத்து திறந்து பார்த்தபோது, 505 தங்கக் காசுகள் அதில் இருப்பது தெரிய வந்தது. இவை, தலா 3.4 கிராம் எடை கொண்டவை எனவும், மொத்த எடை 1,716 கிராம் எனவும் கோயில் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, வருவாய்த் துறையினரை அழைத்து தங்கக் காசுகளை மீட்டு கருவூலத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் ஸ்ரீதர் தங்கக் காசுகளை மீட்டு திருச்சி கருவூலத்தில் ஒப்படைத்தார்.
தொடர்ந்து, அந்த தங்கக் காசுகள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பதைக் கண்டறிய தொல்லியல் துறையினர் இன்று ஆய்வு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.