தனது வீட்டை அபகரிக்க முயற்சி செய்ததாக பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷை சேலம் போலீஸார் கைது செய்தனர்.
சேலம் அடுத்த கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில் எஸ்என் சிங், ஆஷாகுமாரி தம்பதிக்கு சொந்தமான வீட்டை, கடந்த 2015-ம் ஆண்டு சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷூக்கு ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்டனர்.
இந்நிலையில் கடந்த 2017-ம்ஆண்டு எஸ்என் சிங் இறந்து விட்டார். இவரது மனைவி ஆஷாகுமாரி, பெங்களூருவில் உள்ள மகள் அக்கன்க்ஸ் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று சேலம் ஆட்சியர் அலுவலகத்துக்கு மகளுடன் வந்த ஆஷாகுமாரி, “தனது வீட்டை வாடகைக்கு எடுத்த பியூஸ் மானுஷ், வீட்டை காலி செய்ய மறுத்து மிரட்டல் விடுப்பதாக” புகார் மனு அளித்தார். மேலும் இதுகுறித்து கன்னங்குறிச்சி காவல் நிலையத்திலும் பியூஸ் மானுஷ் மீது புகார் கொடுத்தார்.
இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் வீடு வாடகை ஒப்பந்தம் முடிந்த நிலையில், வீட்டை காலி செய்ய சொல்லி ஆஷாகுமாரி, பியூஸ் மானுஷிடம் கேட்டும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தது தெரியவந்தது.
இதையடுத்து, பியூஸ் மானுஷை போலீஸார் கன்னங்குறிச்சி காவல்நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரித்தனர். விசாரணையில், பியூஷ் மானுஷ்வீட்டை காலி செய்ய மறுத்ததோடு, வீட்டின் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியதும் தெரியவந்தது.
இதை தொடர்ந்து பியூஸ் மானுஷ் மீது பெண் வன்கொடுமை, தகாத வார்த்தையில் திட்டுதல், காயங்கள் ஏற்படுதல் கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்தனர்.