தமிழகம்

தமிழகத்தில் இந்த ஆண்டில் 72 லட்சம் மெட்ரிக் டன் அரிசி உற்பத்தி: கடந்த ஆண்டைவிட 10.68 லட்சம் மெட்ரிக் டன் அதிகம்

டி.செல்வகுமார்

தமிழகத்தில் இந்த ஆண்டு (2019-20) அரிசி உற்பத்தி 72 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் அதிக மழை பெய்ததால், இந்த ஆண்டு மேட்டூர் அணை 3 முறை நிரம்பியது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் காவிரி நீர், டெல்டா மாவட்டங்களின் கடை மடை பகுதிகள் வரை சென்றது. டெல்டா மாவட்டம் தவிர பிற மாவட்டங்களிலும் போதிய அளவு மழை பெய்ததால் நீராதாரங்களில் தேவையான அளவு நீர் இருப்பு இருந்தது.

இதனால், தமிழ்நாடு முழுவதும் 18.174 லட்சம் எக்டேரில் (ஒரு எக்டேர் என்பது 2.5 ஏக்கர்)நெல் சாகுபடி நடைபெற்றது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் 1.693 லட்சம் எக்டேர், திருவாரூர் - 1.72 தஞ்சாவூர் - 1.732, திருவண்ணாமலை - 1.558, விழுப்புரம் - 1.532, புதுக்கோட்டை - 0.86, ராமநாதபுரம் 1.274, திருவள்ளூர் - 0.776, திருச்சி - 0.484, சிவகங்கை - 0.7 லட்சம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப் பட்டது. இதில் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 12 ஆயி ரத்து 590 எக்டேரில் ஆனைக் கொம்பன் ஈ தாக்குதலும், திருவள்ளூர் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 900 எக்டேரில் புகையான் நோய் தாக்குதலும் காணப்பட்டது. இருப்பினும், ‘பெறப்பட்ட மழை அளவு மற்றும் தொழில்நுட்ப உத்திகளை உரிய முறையில் மேற்கொண்டதால் நோய்த் தாக்குதலால் விளைச்சல் பாதிக்க வில்லை’ என்று வேளாண்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வேளாண் உயர் அதிகாரி கூறும்போது, “தமிழகத்தில் இதுவரை 13.273 லட்சம் எக்டேரில் நெல் அறுவடை முடிவடைந்துள்ளது. இந்த ஆண்டு (2019-20) அரிசி உற்பத்தி 72 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டைவிட 10.68 லட்சம் மெட்ரிக் டன் அதிகமாகும். தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 5.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் பரவலாக மழைப்பொழிவு குறைவு, நோய் தாக்கு தல் காரணமாக நாடு முழுவதும் நெல் உற்பத்தி 28 சதவீதம் வரை குறைவாக இருக்கும் என்று மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு நெல் உற்பத்தி அதிக மாகவே இருக்கும்” என்றார்.

SCROLL FOR NEXT