ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை உடனடியாக தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என பேரவைத் தலைவரிடம் திமுக சார்பில் தங்க. தமிழ்ச்செல்வன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக பிரிந்து செயல்பட்டார். அப்போது சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், ஓபிஎஸ் தலைமையிலான 11 எம்எல்ஏக்கள் அரசுக்குஎதிராக வாக்களித்ததால் அவர்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்த நீதிபதிகள், பேரவைத் தலைவர் முடிவெடுப்பார் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், திமுகவைச் சேர்ந்த தங்க. தமிழ்ச்செல்வன், பேரவைத் தலைவரை சந்தித்து மனு அளிப்பதற்காக தலைமைச் செயலகத்துக்கு வந்தார். பேரவைத் தலைவர் இல்லாததால் அவரது செயலரிடம் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை உடனடியாக தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற மனுவை சட்டப்பேரவை தலைவருக்கு கொடுத்துள்ளோம். தகுதி நீக்க விவகாரத்தில் சட்டப்பேரவை தலைவர் 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று மணிப்பூர் மாநில வழக்கில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அந்த அடிப்படையில் பார்த்தால், ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் மீது தமிழக சட்டப்பேரவைத் தலைவர் 3 ஆண்டுகளாக தகுதிநீக்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தவறு. இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அவசரமாக தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.
ஒரு கட்சியின் சார்பில் தேர்வு செய்யப்பட்டவர்கள், அக்கட்சி கொறடா உத்தரவை மீறி மாற்றிவாக்களித்தால் தேர்வு செய்த மக்களை அவமதித்ததாக அர்த் தம். அவர்கள் மீது 15 நாட்களுக்குள் பேரவைத் தலைவர் நட வடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால், உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் எங்கள்தரப்பு வழக்கறிஞர் கேட்ட பிறகுதான் சம்பந்தப்பட்டவர்களுக்கு பேரவைத் தலைவர் நோட்டீஸ் வழங்கியுள்ளார். எனவே, 11 உறுப்பினர்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உச்ச நீதிமன்ற உத்தரவை நாங்கள் மதிக்கிறோம். சட்டத்தின்படி பேரவைத் தலைவர் முடிவெடுப்பார் என நம்புகிறோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி இந்த மனுவை அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.