தமிழகம்

மதுவிலக்கு அமலுக்கு வந்தால் மது ஆலைகளும் மூடப்படும்: கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் பதில்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் மதுவிலக்கு அமலுக்கு வந்தால், திமுகவினர் நடத்துவதாக கூறப்படும் மது ஆலைகளும் மூடப்படும் என்பதை அரசியல் கட்சித் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறுகையில், ''காந்தியவாதி சசிபெருமாள் மரணத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூடக்கோரி போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.

ஆனால், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்தான் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மாவட்டத் தலைநகரங்களில் ஆகஸ்ட் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

திமுகவை சேர்ந்தவர்கள் மதுபான ஆலைகளை நடத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோர் கூறுகின்றனர். மதுவிலக்கு வந்துவிட்டால் மது உற்பத்தி ஆலைகளும் மூடப்படும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

திராவிடக் கட்சிகளுடன் சத்தியமாக கூட்டணி இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். கூட்டணிக்கு வாருங்கள் என அவரை எந்த கட்சியும் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லை'' என்று ஸ்டாலின் கூறினார்.

SCROLL FOR NEXT