சங்கரன்கோவில் அருகே வீரிருப்பில் அமைக்கப்பட்டுள்ள உலக அமைதிக்கான புத்த கோபுரம். 
தமிழகம்

தென்னிந்தியாவில் முதல் முறையாக 100 அடி உயரமுள்ள உலக அமைதிக்கான புத்த கோபுரம்- மார்ச் 4-ல் திறக்க ஏற்பாடுகள் தீவிரம்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தென்னிந்தியாவிலேயே தமிழகத்தில் முதல்முறையாக 100 அடிஉயரமுள்ள உலக அமைதிக்கான புத்த கோபுரம் அமைக்கப் பட்டுள்ளது. சங்கரன்கோவில் அருகே வரும் 4-ம் தேதி நடைபெறும் இதன் திறப்பு விழாவில் ஜப்பானில் இருந்து 30 புத்தமத குருக்கள் பங்கேற்கின்றனர்.

தகவல் தொழில்நுட்பம் பல மடங்கு மேம்பட்டு உலகமே ஒருகிராமமாக சுருங்கிவிட்டது. இருந்தபோதிலும், இதே காலகட்டத்தில் தான் போர், அணு ஆயுதங்கள் போன்ற மனித கண்டுபிடிப்புகளால் உயிரினங்கள் அழிவைச் சந்தித்து வருகின்றன. இச்சூழ்நிலையில் புத்தர் பின்பற்றிய கொள்கைகள், காந்தியின் அகிம்சை வழியைக் கடைப்பிடிப்பது அவசியமாகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்புபேரரசர் அசோகர் போரைக் கைவிட்டு புத்த அமைதி கோபுரங்களை உருவாக்கி அமைதியை நிலைபெறச் செய்தார். அதே நோக்கத்தில் 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த புத்த துறவி நிட்சு தட்சு பியூஜீ உலகம் முழுவதும் அமைதிக் கோபுரத்தை உருவாக்கி அமைதியை நிலைநாட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிட்சு தட்சு பியூஜீ, காந்தியடிகளுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர். 1969-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் நேரு உதவி யோடு முதன் முதலில் புத்தர் உபதேசம் செய்த பிகார் மாநிலம் ராஜ்கீர் மலையில் உலக அமைதி புத்த கோபுரம் அமைக்கப்பட்டது. முன்னாள் குடியரசுத் தலைவர் விவி.கிரி அமைதி கோபுரத்தை திறந்து வைத்தார். பின்னர் இதே போன்று அமைதி கோபுரங்கள் 6 மாநிலங்களில் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், தென்னிந்தியா வில், தமிழகத்தில் முதன்முறையாக அமைதி கோபுரம் அமைக்கப்படுகிறது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரிருப்புகிராமத்தில் ‘தமிழ்நாடு நிப்பொன் சன் மியொ ஹொஜி’ புத்த அமைப்பு,உலக அமைதிக்கான புத்த அமைதிகோபுரத்தை அமைத்து வருகிறது.

100 அடி உயரம் 150 அடி விட்டம் உள்ள இந்தக் கோபுரத்தின் மேலே புத்தரின் சிறிய அளவிலான அஸ்தி வைக்கப்பட உள்ளது. புத்தரின் உபதேசம் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டது. இந்தக் கோபுரத் திறப்பு விழா மார்ச் 4-ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை, தமிழ்நாடு நிப்பொன்சன் மியொ ஹொஜி அமைப்புடன் மதுரை காந்தி அருங்காட்சியக நிர்வாகமும் ஒருங்கிணைந்து செய்து வருகிறது.

இதுகுறித்து, காந்தி அருங் காட்சியக இயக்குநர் கே.ஆர்.நந்தா ராவ் கூறியதாவது: புத்தரின் கோட்பாட்டைப் பின்பற்றி நாட்டின் விடுதலைக்காக அகிம்சை வழிப் போராட்டத்தை காந்தியடிகள் தேர்வு செய்தார். அதைக் கேள்விப் பட்ட ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிட்சு தட்சு பியூஜீ, இந்தியா வந்து அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியடிகளை வார்தா ஆசிரமத்தில் சந்தித்தார்.

30 புத்தமத குருக்கள்

காந்தியடிகளின் சர்வ சமய வழிபாட்டில் புத்த மந்திரத்தைச் சொல்லி உலக அமைதிக்காகப் பிரார்த்தனை செய்தார். அதனால், இந்தியாவில் உலக அமைதிக்கான புத்த கோபுரங்கள் அமைப்பதற்கு காந்தி அருங்காட்சியகம் உதவி செய்து வருகிறது. வீரிருப்பில் திறக்கப்படும் உலக அமைதிக்கான புத்த கோபுர விழாவில் ஜப்பானில் இருந்து 30 புத்தமத குருக்கள் பங்கேற்கின்றனர். இந்தக் கோபுரத்தில் தினமும் உலக அமைதிக்கான பிரார்த்தனை, வழிபாடு உள்ளிட்டவை காலை, மாலை நேரங்களில் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT