"ஒழுங்காக செயல்படாத கூட்டுறவு சங்கச் செயலர்களுக்கு சம்பளம் கொடுக்காதீர்கள்; சஸ்பெண்ட் செய்யுங்கள்" என கூட்டுறவு சங்கத் தலைவர்களிடம் கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத் துறை அமைச்சர் பாஸ்கரன் அறிவுறுத்தினார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவு சங்கத் தலைவர்களுக்கு பயிற்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஆரோக்ய சுகுமார், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் பழனீஸ்வரி, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சந்திரன், பாம்கோ நிறுவனத் தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேசியதாவது:
பலமுறை அலைந்து, எங்களிடம் சண்டையிட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் பதவியை பெற்றீர்கள். ஆனால் சங்க வளர்ச்சிக்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பல சங்கங்களில் கடன் கொடுக்காததால் விவசாயிகள் தொடர்பே இல்லாமல் போய்விட்டது.
பல சங்கங்கள் செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. உங்களிடம் (தலைவர்கள்) கேட்டால் சங்கத்தின் செயலாளர்கள் ஒழுங்காக செயல்படவில்லை என்று கூறுகின்றனர்.
ஒழுங்காக செயல்படாத கூட்டுறவு சங்கச் செயலர்களுக்கு சம்பளம் கொடுக்காதீங்க, சஸ்பெண்ட் செய்யுங்கள். சிவகங்கை மாவட்டத்தில் நான்கு, ஐந்து சங்கங்களில் மட்டுமே முறையாகக் கடன் கொடுள்ளன.
சங்கங்களுக்கு வருமானமே இல்லாவிட்டாலும், செயலர்கள் ரூ.50 ஆயிரம், ரூ.60 ஆயிரம் வரை சம்பளம் வாங்குகின்றனர். கடனை வசூலித்தால் தான் சங்கங்களை இயக்க முடியும். ஆனால் கடனை நாங்கள் கொடுக்கவில்லை என தலைவர்கள் ஒதுங்கிக் கொள்கின்றனர்.
ஏதாவது ஒப்பந்தப் பணி எடுப்பதாக இருந்தால் மட்டும் எங்களை தலைவர்கள் அணுகுகின்றனர். ஆனால் சங்கத்தை இயக்க ஆர்வம் காட்டுவதில்லை.
கடந்த ஆண்டு உரம் வாங்கி விற்கக் கூட சில சங்கங்கள் முன்வரவில்லை. கடன், உரம் கொடுக்கும் தலைவர்களை விவசாயிகள் சாமிபோல் கும்பிடுவர், என்று பேசினார்.