தமிழகம்

ஆள்மாறாட்டம் செய்து இந்தியில் நீட் தேர்வில் தேர்ச்சி: சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் தந்தையுடன் கைது

செய்திப்பிரிவு

இந்தி மொழி தெரியாத மாணவர், ஆள்மாறாட்டம் செய்து, இந்தியில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மாணவரையும், அவருக்கு உதவிய அவரது தந்தையையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பின்னர் புற்றீசல்போல் தேர்வுப் பயிற்சி மையங்கள் முளைத்தன. நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத அதே சமயம் மருத்துவப் படிப்புக்கு ஆசைப்படும் வசதி படைத்தவர்களை வலைவிரித்துப் பிடித்து, பணத்தை வாங்கி ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற வைத்த சம்பவம் நடந்தது.

இதுகுறித்த விசாரணையில் ஈடுபட்ட தமிழக சிபிசிஐடி போலீஸார் 2 மாணவிகள், 9 மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் என 19 பேரை இதுவரை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்கள் சிக்கவில்லை. அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்தான் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் இணையதள முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், சென்னை மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவன் தனுஷ்குமாருக்கு இந்தி மொழி தெரியாது. ஆனால், பிஹாரில் இந்தியில் நீட் தேர்வு எழுதி மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து மாணவன் தனுஷிடம் மருத்துவக் கல்வி மற்றும் கல்லூரி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவர் தனுஷ் 2018-ம் ஆண்டு நீட் தேர்வில் பிஹார் மாநிலத்தில் இந்தியில் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்று, சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பது தெரியவந்தது. மாணவர் தனுஷுக்கு இந்தி தெரியவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

உடனடியாக மருத்துவக்கல்லூரி முதல்வர், இதுகுறித்து சிபிசிஐடி போலீஸாருக்குப் புகார் அளித்தனர். புகாரைப் பெற்ற சிபிசிஐடி போலீஸார் மாணவர் தனுஷ் மற்றும் அவரது தந்தை தேவேந்திரனை விசாரணைக்கு அழைத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, நேற்று முன்தினம் தனுஷ்குமாரையும், நேற்று தேவேந்திரனையும் கைது செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

தனுஷுக்கு பதில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மாணவருக்கும், இதற்கு ஏற்பாடு செய்து கொடுத்த இடைத்தரகருக்கும் சேர்த்து மொத்தம் ரூ.20 லட்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்தும் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT