தமிழகம்

சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களை திமுக, காங்கிரஸ் தூண்டிவிடுகின்றன: எச்.ராஜா

செய்திப்பிரிவு

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தூண்டிவிடுவதாக எச்.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட பாஜக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் இன்று (புதன்கிழமை) கலந்துகொள்ள வந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், "குடியுரிமை சட்டத்தினால் இந்தியாவில் வாழும் எவருக்குமே எவ்வித பாதிப்பும் இல்லை என பலமுறை கூறியும் சிறுபான்மை இன மக்களைப் போராடுவதற்கு திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சிகள் தூண்டி விடுகின்றன.

சென்னை, வண்ணாரப்பேட்டையில் தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் நிலையில், டெல்லியைப் போன்று அங்கு வன்முறை வெடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, அதற்கு முன்பாக வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்களை தமிழக அரசு அப்புறப்படுத்த வேண்டும்.

அதிபர் ட்ரம்ப் வருகையால் இந்திய-அமெரிக்க உறவு வலுப்பட்டிருக்கிறது. கரோனா பாதிப்பினால் சீனாவிற்கு அந்நிய முதலீடு செல்வதில் சிக்கல் உள்ளது. இதனை இந்தியாவிற்கு திருப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

SCROLL FOR NEXT