"சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் குறித்து அதிமுகவுக்கு சரியான புரிதல் இல்லை" என மனிதநேய ஜனநாயக கட்சியின் எம்.எல்.ஏ., தமிமுன் அன்சாரி விமர்சித்துள்ளார்.
நாகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவின் ராமதாஸ் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்.
சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்-க்கு அகாலிதலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிஹாரில் நிதிஷ் குமாரின் கட்சியும் இவற்றை எதிர்த்துள்ளது. பாஜகவின் கூட்டணியில் உள்ள ராம் விலாஸ் பாஸ்வானும் இந்தச் சட்டத்தை எதிர்த்துள்ளார்.
இப்படிப் பலரும் எதிர்க்கும் போது அதிமுக மட்டும் மவுனம் காக்க காரணம் இருக்கிறது. அதிமுகவுக்கு பல்வேறு அரசியல் நெருக்கடிகள் உள்ளன.
கீரிப்பிள்ளை வாயில் சிக்கியுள்ள கோழியைப் போல பாஜகவின் வலையில் அதிமுக சிக்கிக் கொண்டு இருக்கிறது. அதனால் அவர்கள் சுதந்திரமாக செயல்படாமல் இருக்கிறார்கள்" என்றார்.