ஆரணியில் ஸ்ரீராம் பட்டு மாளிகை என்ற ஜவுளி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து 20 மணிநேரத்துக்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் உள்ள கொசப்பாளையம் சுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் குணசேகர். இவர் ஸ்ரீராம் பட்டு மாளிகை என்ற ஜவுளி நிறுவனத்தை நடத்தி வருகிறார். பல்வேறு இடங்களில் கிளைகளுடன் இந்த நிறுவனம் செயல்படுகிறது. இவருக்குச் சொந்தமாக ஆரணி - திருவண்ணாமலை பைபாஸ் சாலையில் வைஷ்ணவி, ஸ்ரீராம், சாய்ராம் என்ற 3 திருமண மண்டபங்கள் உள்ளன. சென்னை பெங்களூருவிலும் சொத்துகள் மற்றும் பட்டு நிறுவனக் கிளைகள் இருப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில், குணசேகர் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்துள்ள நிலையில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று தொடங்கிய இந்த சோதனை இன்று (பிப்.26) காலையும் தொடர்ந்தது. தொடர்ந்து 20 மணிநேரத்துக்கும் மேலாக நடைபெறும் சோதனையில் வேலூர், திருவண்ணாமலை, சென்னையைச் சேரந்த 40-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீராம் பட்டு நிறுவனம் மற்றும் 3 திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் ஓரே நேரத்தில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனால் ஆரணி பட்டு உரிமையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சோதனையின்போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்த பிறகு குணசேகரிடம் விளக்கம் கேட்கப்படும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.