தமிழகம்

அடிப்படை வசதிகள் செய்துதரும் வரை மதுரை வண்டியூர் சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை: உயர் நீதிமன்ற கிளை அதிரடி

கி.மகாராஜன்

அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துதரும் வரை மதுரை வண்டியூர் சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மேலும், இந்த உத்தரவை நாளை முதலே (பிப்.27) அமல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த இம்மானுவேல், மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றில், "மதுரை உத்தங்குடியில் இருந்து கப்பலூர் வரையிலான சுற்றுச்சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சாலையில் தற்போது வண்டியூர், சிந்தாமணி, வளையங்குளம் ஆகிய 3 இடங்களில் டோல்கேட் மையம் அமைக்கப்பட்டு, செயல்படுகின்றன.

மதுரை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மேலூர் சிட்டம்பட்டி, தூத்துக்குடி சாலையில் எலியார்பத்தி, திருமங்கலம் சாலையில் கப்பலூர் என 3 டோல்கேட் மையங்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.

தற்போது சென்னையில் இருந்து தென் மாவட்டம் செல்லும் வாகனம் மதுரை மாவட்டத்தில் மட்டும் சிட்டம்பட்டி, வண்டியூர், சிந்தாமணி, வளையங்குளம் (விமானநிலையம் அருகில்), கப்பலூர் என 5 டோல்கேட் மையங்களில் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

டோல்கேட்டுகளில் வாகனங்கள் தேங்கி நிற்பதால் அவசரமாக செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் சிரமப்படுகின்றன. புதிதாக அமைக்கப்பட்ட 3 டோல்கேட் மையங்களில் வாகனங்களிடம் இருந்து 60 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இது நெடுஞ்சாலை ஆணைய விதிகளுக்குப் புறம்பானது.எனவே 27 கிலோ மீட்டர் தூரத்தில் 3 சுங்க கட்டண மையம் அமைக்க அனுமதித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

சுங்கச் சாவடியில் தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. ஆகவே, அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வரை கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் இன்று நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில்,"மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலைகளில் சிட்டம்பட்டி, கப்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுங்கக் கட்டணம் செலுத்தப்படுகிறது.

இடையில் மாநில நெடுஞ்சாலை எனக்கூறி 3 இடங்களில் கட்டணம் வசூலிக்கின்றனர். 3 இடங்களில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதால், வாகனங்கள் செல்வதில் மிகவும் காலதாமதமாகிறது.

விரைவாகச் செல்ல வேண்டுமென சாலை அமைத்ததின் நோக்கமே சீர் குலைந்துவிட்டது.மருத்துவமனைகள், விமான நிலையங்கள் செல்பவர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை. சுங்கச்சாவடியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஆம்புலன்ஸ்கள் செல்ல தனி வழி அமைக்கப்படவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு சுங்க வசூல் மையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "வளையங்குளம், சிந்தாமணி சுங்கச்சாவடிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளன. வண்டியூர் சுங்கச்சாவடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 4 வாரங்களில் பணிகள் நிறைவடையும்" எனத் தெரிவித்தார்.

அதற்கு மனுதாரர்கள் தரப்பில், அதுவரை சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்" எனக் கோரப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்றும் வரை மதுரை வண்டியூர் சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணம் வசூலிக்கக்கூடாது. சிந்தாமணி, வளையங்குளம் சுங்கச்சாவடிகளிலும் வண்டியூருக்கென நேரடியாகவோ, மறைமுகமாகவோ கட்டணம் வசூலிக்கக்கூடாது எனவும், இந்த உத்தரவை நாளை முதல் அமல்படுத்தவும் உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT