முதல்வர் பழனிசாமி - மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம் 
தமிழகம்

முதல்வருக்கும் சேர்த்துதான் நாங்கள் போராடுகிறோம்: ஸ்டாலின் பேச்சு

செய்திப்பிரிவு

முதல்வருக்கும் சேர்த்துதான் நாங்கள் போராடுகிறோம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் இன்று (பிப்.26) நடைபெற்ற கட்சி பிரமுகரின் இல்லத் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

"பாஜகவுக்கு அடிபணியும் கட்சிகள் சிஏஏவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்தன. அதிமுக, பாமக கட்சிகள் ஆதரவளித்து வாக்களித்திருக்காவிட்டால், சிஏஏ சட்டத்தை நிறைவேற்றியிருக்க முடியாது.

வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபர் இந்தியா வந்திருக்கும் சமயத்தில் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற கலவரங்கள் இந்த நிமிடம் வரை தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இவர்கள் வாக்களித்ததால் தான் நாடு முழுவதும் கலவரம் நடந்துகொண்டிருக்கிறது.

முஸ்லிம்கள், இலங்கை தமிழர்களுக்கு மட்டும் இதனால் பாதிப்பல்ல. இந்து மதம் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கும் இதனால் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

நாம் பிறந்த தேதி, எங்கே பிறந்தோம் என்பதை மட்டுமல்லாமல் நம் பெற்றோர், தாத்தா, பாட்டி எங்கே பிறந்தனர் என்பதையும் சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அப்படி சொல்லாதவர்களை சந்தேகத்துக்குரியவர்கள் என்ற பட்டியலில் இணைத்து விடுவர். நாம் அந்தப் பட்டியலில் தான் இருக்கப் போகிறோம். இந்தியாவில் 50-60% மக்கள் அந்த பட்டியலில் இணைவதற்கான சூழ்நிலை இருக்கிறது.

முதல்வர் பழனிசாமியை பல்வேறு தரப்பினர் சந்தித்து சிஏஏவை தமிழக அரசு எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுமாறு வலியுறுத்தினர். அப்போது இதில் உள்ள சந்தேகங்களை முதல்வரிடம் தெரிவித்துள்ளனர். அந்த சமயத்தில், நான் எங்கே பிறந்தேன் என எனக்கே தெரியாது, அதற்கான ஆவணங்கள் இல்லை என முதல்வர் தெரிவித்தார். எனவே, முதல்வருக்கும் சேர்த்துத்தான் இந்த கோரிக்கையை வைக்கிறோம். தொடர்ந்து போராடுகிறோம்"

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

SCROLL FOR NEXT