தமிழகம்

ஒகேனக்கல் படகு விபத்து: பலியானோர் குடும்பத்தினருக்கு அரசு நிதியுதவி அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஒகேனக்கல் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "30.8.2015 அன்று தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் ஆற்றில் தொம்பச்சிக்கல் என்ற இடத்தில் சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஓரு குடும்பத்தினர் பயணம் செய்த பரிசல் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பரிசலில் பயணம் செய்த கிருஷ்ணமூர்த்தி, கௌரி, ரஞ்சித், கோகிலா, இரண்டரை வயது குழந்தை தர்ஷன், பத்து மாதக் குழந்தை சுதிப்தா ஆகியோர் நீரில் மூழ்கினர் என்ற செய்தி அறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்தேன்.

நீரில் மூழ்கியவர்களில் கிருஷ்ணமூர்த்தி, ரஞ்சித், கௌரி, குழந்தை தர்ஷன் ஆகியோரின் உடல்கள் தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீரில் மூழ்கிய திருமதி கோகிலா மற்றும் குழந்தை சுதிப்தா ஆகியோரின் சடலங்களை விரைவாக மீட்க துரித நடவடிக்கை எடுக்குமாறும், உயிரிழந்தவர்களின் உடல்களை சென்னைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாவட்ட நிருவாகத்திற்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கும் நான் ஆணையிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், இந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிருவாகத்திற்கும், மாவட்ட காவல் துறைக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT