தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் ஒன்றில் போட்டியிடும் வாய்ப்பை அதிமுக தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று (பிப்.25) திருமண நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் தரப்படுமா என்பது குறித்து நாங்கள் இதுவரை பேசவில்லை. கூட்டணி அமைத்த ஆரம்பத்திலேயே இதுகுறித்து கேட்கப்பட்டதுதான். மாநிலங்களவை இடம் கிடைக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்" என தெரிவித்தார்.
அப்போது, மாநிலங்களவை இடம் வேண்டும் என தேமுதிக மீண்டும் வலியுறுத்துமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, "கூட்டணி அமைத்தபோது இதுகுறித்து பேசியுள்ளோம். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என தெரிவித்தார்.