கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் உள்ளூர் திட்டக் குழுமத்தின் ஒப்புதல் பெறாமல் கல் குவாரிக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக நெல்லை ஆட்சியரிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பொன்னார்குளத்தைச் சேர்ந்த செந்தூர்பாண்டி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றி 5 கி.மீ. வரையிலான பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்குள் கல் குவாரி நடத்த உரிமம் வழங்க வேண்டும் என்றால், உள்ளூர் திட்டக்குழுமத்திடம் ஒப்புதல் பெற வேண்டும்.
இந்நிலையில், கூடங்குளம் அணு உலையில் இருந்து 2 கி.மீ.தொலைவில் உள்ள எருக்கன்துறை கிராமத்தில் கல் குவாரிநடத்த சென்னையைச் சேர்ந்த நிறுவனத்துக்கு 2018-ல் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு உள்ளூர் திட்டக் குழுமத்திடம் ஒப்புதல் பெறவில்லை.
கூடங்குளத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் கல் குவாரி செயல்பட தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, டி.ரவீந்திரன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் உள்ளூர் திட்டக் குழுமம் ஒப்புதல் பெறாமல் கல் குவாரிக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக ஆட்சியர் உட்பட அதிகாரிகளிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.