யாருடைய தகுதி குறித்தும், பேசும் தகுதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
திருமங்கலம் தொகுதியில் உள்ள டி.கல்லுப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. உதவிகளை வழங்கி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியது:
ஜெயலலிதா இல்லாத சூழலிலும் மக்கள் நலத்திட்டங்களை தொய்வின்றி, எந்தக் குறையும் இல்லாமல் வழங்கி வருகிறோம். ரூ.4.50 லட்சம் கோடி கடன் தமிழக அரசுக்கு இருப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். எத்தனை லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்தாலும், மக்கள்நலத் திட்டங்களை விடாமல் செய்வோம். எங்களை நம்பிதான் கடன் கொடுக்கிறார்கள். அதை நாங்கள் மக்கள் நலத்திட்டங்களுக்காகப் பயன்படுத்தி வருகிறோம். இதுபற்றி எதிர்க்கட்சிகள் புலம்ப வேண்டியதில்லை.
மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்று எதிர்க்கட்சியினர் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சந்தேகம் இருப்பவர்கள் பணிகள் நடக்கும் இடத்துக்குச் சென்று பார்வையிடலாம். அப்பகுதியில் சாலை, சுற்றுச்சுவர் என ஏராளமான பணிகள் நடந்து வருகின்றன. `ஜீ பூம்பா' என்றவுடன் எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிடாது என்றார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாட அதிமுகவுக்கு என்ன அருகதை இருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்கிறார். இத்திட்டத்தை அறிவித்து உடனே அரசாணை வெளியிட்டு பிப்.24-ல் முதல்வர் செயல்படுத்தி உள்ளார். திட்டத்தின் நிறைகளைப் பற்றி விவாதிக்கலாம். மக்களுக்கு நாங்கள் நல்லது செய்வதை ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பது அவருடைய அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது.
இதை மதுரையில் நடந்த திமுககூட்டத்திலேயே ஸ்டாலின் வெளிப்படுத்தினார். எதைச் செய்தாலும் குற்றம் கண்டுபிடிக்கிறார். ஸ்டாலின் கூறும் குறைகளை மக்கள் கேட்பதில்லை.
தம்பியாக அறிவுரை
எதிர்க்கட்சித் தலைவருக்குரிய இலக்கணத்தோடு நடந்துகொண்டால், தமிழ்நாட்டு மக்கள் அவரை ஏற்றுக் கொள்வார்கள். அவருடைய கடந்தகால வரலாறு என்ன? அவரது கல்லூரிக் காலங்களில் நடந்தவற்றையெல்லாம், இன்னும் தமிழ்நாட்டு மக்கள் மறந்து விடவில்லை. மற்றவர்களின் தகுதி பற்றி பேசும் தகுதி அவருக்கு இல்லை. அப்படியே பேசி, இருக்கும் தகுதியையும் அவர் இழந்து விடக்கூடாது என்பதை ஒரு தம்பியாக இருந்து நான் சொல்கிறேன்.
தகுதி என்ற வார்த்தைக்கு நாங்கள் முழுத் தகுதியானவர்கள். ஒழுக்கத்திலும் சரி, உழைப்பிலும் சரி முதல்வரின் தகுதி, எந்த வகையிலும் யாருக்கும் குறைந்தது அல்ல என்பதை ஸ்டாலின் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.