மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், மற்றொரு ஆசிரியருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், ஆபாசமாக பேசியதாகவும் அந்த பள்ளியில் பணி புரிந்த ஆசிரியர்களான நாகராஜ் மற்றும் புகழேந்தி ஆகியோர் மீது கடந்த 2012-ம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்டது. அதையடுத்து இருவர் மீதும் செங்கல்பட்டு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு
இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம், கடந்த 2018-ம் ஆண்டு அவர்கள் இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், கடந்த 21-ம் தேதி அளித்த தீர்ப்பில், ‘‘இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 2 ஆசிரியர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு புகாருக்கு தகுந்த ஆதாரங்கள் உள்ளன. இவர் களின் அத்துமீறல்களினால் 4 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவி சாட்சியம் அளித்தாலே போதுமானது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனவே இந்த 2 ஆசிரியர்களையும் குற்றவாளிகள் என இந்த நீதிமன்றம் முடிவு செய்கிறது. எனவே அவர்களை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன். தண்டனை அறிவிப்புக்காக இருவரும் பிப்.25 அன்று நேரில் ஆஜராக வேண்டும்” என உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி ஆசிரியர்கள் இருவரும் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக நேற்று ஆஜராகினர். அப்போது குற்றம்சாட்டப்பட்ட நாகராஜன், தான் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளதாகவும், தன் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதையடுத்து நீதிபதி பி.வேல்முருகன், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் நாகராஜூக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.24 ஆயிரம் அபராதம் விதித்தும், மற் றொரு ஆசிரியரான புகழேந்திக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ. 4 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.
ஜாமீன் வழங்க மறுப்பு
அப்போது ஆசிரியர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ரவி, கனகராஜ் ஆகியோர் இருவருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கோரினார்.
அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காரல்மார்க்ஸ் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். அதையடுத்து, ஆசிரியர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து, சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.