நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மேலும் ஒரு மாணவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். அவரது தந்தையிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்த உதித் சூர்யா என்றமாணவர், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது முதன்முதலில் தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீஸார், உதித் சூர்யாவையும் அவரது தந்தையையும் கைது செய்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் மூலம்தேர்வு எழுதி வெற்றி பெற்றிருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மோசடியாக வெற்றி பெற்ற மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வந்தனர்.
தமிழகத்தை சேர்ந்த மாணவ - மாணவிகள் நீட்தேர்வு முறைகேட்டுக்காக வெளி மாநிலங்களை தேர்வு செய்து ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதி மோசடியாக மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்திருப்பதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்களின் புகைப்படங்களை சிபிசிஐடி போலீஸார் கடந்த வாரம் வெளியிட்டனர். 2 மாணவிகள் உட்பட 10 பேரை தேடி கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
நீட்தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 20 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு மாணவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரியை சேர்ந்த அந்தமாணவர் சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவரும் ஆள்மாறாட்டம் மூலமாகவே மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்து வந்ததாக கூறப்படுகிறது.
ரூ.20 லட்சம் செலவு
நீட் தேர்வில் முறைகேடாகதேர்வு எழுதுவதற்காக மாணவர்களின் பெற்றோர் ரூ.20 லட்சம் வரை செலவு செய்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து மாணவரின் பெற்றோரையும் பிடித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துசிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.