தேனியில் நடந்த திமுக உட்கட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், தள்ளுமுள்ளு அடிதடியாக மாறியது.
தேனி என்ஆர்டி ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் திமுக சார்பில் ஊரக உட்கட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
தேனி மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் அருண் தலைமை வகிக்க, திமுக மாவட்ட பொறுப்பாளர் கம்பம் என்.ராமகிருஷ்ணன், விவசாய அணி மாநில துணைத் தலைவர் மூக்கையா, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், எம்எல்ஏ.க்கள் மகாராஜன், சரவணக்குமார் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.
இந்நிலையில் தேனி ஒன்றிய பொறுப்பாளர் சக்கரவர்த்தி தரப்பினருக்கும், முன்னாள் ஒன்றியச் செயலாளர் ரத்தினசபாபதி ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கிளைக் கழக உறுப்பினர்கள் பட்டியலை சக்கரவர்த்தி தராமல் இழுத்தடிப்பதாகக் கூறினர். இதில் வாக்குவாதம் முற்றி இருதரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது ஒன்றிய துணைச் செயலாளர் சுரேஷ் தள்ளிவிடப்பட்டார். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
நிர்வாகிகள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்திய பிறகு தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. இருப்பினும் மீண்டும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளத் துவங்கினர். இதனால் கூட்டம் சற்று நேரம் நிறுத்தப்பட்டு நிர்வாகிகள் இவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்தில் இருதரப்பினரும் வெளியேறிச் சென்றனர்.
பின்பு தேர்தல் பொறுப்பாளர் அருண் பேசுகையில், ஆதிதிராவிட கிளைகழக உறுப்பினர் சேர்க்கைக்கு இன்று(புதன்) மதியம் வரை விண்ணப்பிக்கலாம். கட்சி தேர்தலுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. போட்டியிட விரும்புபவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.