தமிழகம்

குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்களைக் காப்பாற்ற அதிமுக முந்தி நிற்கும்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

பி.டி.ரவிச்சந்திரன்

குடியுரிமை சட்டத்தில் இஸ்லாமியர்கள் பாதிப்புக்குள்ளானால் அவர்களைக் காப்பாற்ற அதிமுக தான் முதலில் நிற்கும், என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு நகரில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

வத்தலகுண்டு ஒன்றியச் செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் மருதராஜ், தேன்மொழி எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது: வரியே இல்லாத பட்ஜெட்டை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதை அனைவரும் பாராட்டிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் எதிர்க்கட்சியான திமுக குடியுரிமை சட்டப் பிரச்சனையை கையில் எடுத்துக்கொண்டு அதனை பிடித்துத் தொங்கிக் கொண்டுள்ளது.

சட்டசபை விவாதத்தில், தமிழக இஸ்லாமியர்கள் யாராவது குடியுரிமை சட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? என முதல்வர் கேட்டபோது ஸ்டாலினிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

எதற்கெடுத்தாலும் இந்த ஆட்சி கவிழவேண்டும். தூக்கி எறியப்பட வேண்டும் என்றே ஸ்டாலின் புலம்பிக் கொண்டிருக்கிறார். மத்திய அரசுக்கு ஏன் ஜால்ரா போடுகிறீர்கள் என்கிறார்கள். ஜால்ரா போடாவிட்டால் 11 மருத்துவக் கல்லூரிகளை தமிழ்நாட்டிற்கு கொண்டுவரமுடியுமா?

குடியுரிமை சட்டத்தில் இஸ்லாமியர்கள் பாதிப்புக்குள்ளானால் அவர்களைக் காப்பாற்ற அதிமுக தான் முதலில் நிற்கும், என்றார்.

SCROLL FOR NEXT