முல்லைப் பெரியாறு அணையில் இருந்து இரைச்சல் பாலம் வழியே வெளியேறி வரும் நீர் 
தமிழகம்

தொடர் திருட்டால் வழியிலேயே வற்றும் முல்லைப் பெரியாறு நீர்: வைகை அணைக்கான வரத்து குறைவு- தேனி, மதுரைக்கு குடிநீர் பற்றாக்குறை வர வாய்ப்பு

என்.கணேஷ்ராஜ்

முல்லைப்பெரியாறு அணையில் திறந்துவிடப்படும் நீர் குடிநீர் திட்டங்களுக்காக உறிஞ்சுதல், ஆவியாதல், திருட்டு போன்ற பல்வேறு காரணங்களால் வழியிலே வற்றி விடுகின்றன. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்தது.

முல்லைப் பெரியாறு அணை மூலம் லோயர்கேம்ப், கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், பழநிசெட்டிபட்டி வரையிலான 14 ஆயிரத்து 707 ஏக்கர் விளைநிலங்கள் இரண்டு போக சாகுபடியால் பயன்பெறுகின்றன.

மேலும் ஆற்று நீரோட்டத்தினால் தலைமதகு பகுதிகளில் இருந்து தேனி வரை ஆற்றின் இருபகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டமும் வளமாகவே இருப்பதால் விவசாயம் செழிப்பாக இருந்து வருகிறது.

பட விளக்கம்: தேனி உத்தமபாளையம் அருகே ஆற்று நீர் மோட்டார் மூலம் திருடப்படுகிறது

அணையைப் பொறுத்தளவில் தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையும், வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபரில் பெய்யும் மழையும் முக்கிய நீராதாரமாக உள்ளது.

கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாகவே தொடங்கியது. இதனால் இரண்டாம் போக சாகுபடி பொய்த்தது. இருப்பினும் அடுத்த சில வாரங்களில் தொடர் மழையினால் 132 அடிவரை நீர்மட்டம் உயர்ந்தது.

இந்நிலையில் பருவமழை முடிந்த நிலையில் தற்போது நீர்மட்டம் வெகுவாய் குறைந்து வருகிறது. அணையில் நீர்மட்டம் 115 அடியாக உள்ளதால் விநாடிக்கு 100 கனஅடி நீரே வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீர் ராட்சத குழாய்களுக்கு போதுமானதாக இல்லாததால் குமுளி மலைப்பாதையான இரைச்சல்பாலம் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.

தற்போது இப்பகுதியில் வெப்பம் அதிகமாக உள்ளது. நீர்உறிஞ்சுதல், ஆவியாதல் போன்றவற்றின் மூலம் நீரிழப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தலைமதகு பகுதிக்கு அருகிலேயே 50-கனஅடி நீர் உறிஞ்சப்படுகிறது. இதைக் கடந்து வரும் நீர் பல இடங்களில் மோட்டார் மூலம் விவசாயத்திற்காக அதிகளவில் திருடப்படுகிறது.

பட விளக்கம்: தேனி அருகே குன்னூர் பகுதியில் வறண்டு கிடக்கும் வைகைஆறு

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் பெரியாறு அணை நீர் தேனிக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பழனிசெட்டிபட்டி, தேனி, குன்னூர் உள்ளிட்ட ஆற்றின் வழி்த்தடங்கள் நீரின்றி காய்ந்து கிடக்கிறது.

இதனால் வைகை அணைக்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக நீர்வரத்து இல்லை. வறட்சி, வெப்பம், நீரின்மை போன்ற நிலை தொடர்வதால் இந்த ஆண்டு தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆற்றுப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு நீர்திருட்டை தடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT