தமிழகம்

பாம்பன் பாலம் ஐந்தாவது கட்ட கர்டர்கள் மாற்றும் பணி விரைவில் நிறைவு: ரயில்வே அதிகாரிகள் தகவல்

செய்திப்பிரிவு

பாம்பன் ரயில் பாலத்தில் ஐந்தாவது கட்டமாக நடைபெற்று வரும் கர்டர்கள் மாற்றும் பணிகள் முடியும் நிறைவடையும் தருவாயை எட்டியுள்ளன.

பாம்பன் ரயில் பாலம் மன்னார் வளைகுடா மற்றும் பாக். நீரிணைப்பு கடற்பகுதிகளில் தமிழகத்தோடு ராமேசுவரத்தை இணைக்கிறது. இந்த ரயில் பாலம் 2.3 கி.மீ. நீளம் கொண்டது. மேலும், இந்தியாவின் 2-வது மிக நீளமான கடல் பாலம் ஆகும்.

கடலுக்குள் அமைக்கப்பட்ட 146 தூண்களில் 144 கர்டர்கள் இந்த ரயில் பாலத்தை தாங்கி நிற்கின்றன. ஆங்கிலேய பொறியாளர் ஸ்கெர்சர் கட்டியதால் இந்த ரயில் பாலத்துக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது.

ஐந்தாம் கட்டப் பணிகள்

கடந்த 1914-ம் ஆண்டில் பாம்பன் ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு, தற்போது 106 ஆண்டுகளுக்கும் மேல் கடலில் நிலை கொண்டுள்ளது. இப்பாலத்தில் 2007-ம் ஆண்டு அகல பாதை பணிகள் நடைபெற்றன. 2015-ல் 28 கர்டர்களை மாற்றியமைக்கும் பணியும், இரண்டாம் கட்டமாக 2016-ல் 16 கர்டர்களும், மூன்றாம் கட்டமாக 2017-ல் 32 கர்டர்களும், நான்காம் கட்டமாக 2018 நவம்பரில் 27 கர்டர்கள் பொருத்தும் பணியும் நடைபெற்றது. மேலும் பாலத்தின் உறுதித் தன்மை குறித்து ரயில்வே அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் கடந்த 2019 ஜுலையில் ஐந்தாம் கட்டமாக சுமார் ரூ. 8 கோடி செலவில் 27 கர்டர்களை மாற்றும் பணி துவங்கியது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

13.30 மீட்டர் நீளமும், 2.35 மீட்டர் அகலமும், 1.25 மீட்டர் உயரமும் கொண்ட 8 டன் எடையுள்ள ஒவ்வொரு கர்டரும் தண்டவாளங்கள் பொருத்தப் பட்டபின் 11 டன் எடை கொண்டதாக மாறும்.

இந்த கர்டர்களை ஒன்றன் பின் ஒன்றாக வடிவமைத்து ரயில் தண்டவாளங்களில் வைத்தே இழுத்துச் செல்லப்பட்டு கேன்ட்ரி என்று சொல்லக் கூடிய கிரேன் உதவியுடன் பொருத்தப்படுகிறது.

செவ்வாய்கிழமை 23வது கர்டர் பொறுத்தும் பணி நடைபெற்றது. மேலும் மீதுமுள்ள 4 கர்டர்கள் பொறுத்தும் பணி இரண்டு வாரத்திற்குள் முடிவடைந்து விடும். இதனால் காலையில் மட்டும் மதுரை-ராமேசுவரம் பயணிகள் ரயில் மண்டபத்துடன் நிறுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

எஸ். முஹம்மது ராஃபி

SCROLL FOR NEXT