மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை, பொருளாதாரச் சீரழிவு காரணமாக நாமக்கல், ஈரோடு விசைத்தறி தொழில் நசிவடைந்து கருமுட்டை, கிட்னி உள்ளிட்டவற்றை விற்கும் நிலைக்கு பெண்கள் ஆளாகியுள்ளதாக ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் முகநூல் பதிவு:
''மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை - பொருளாதாரச் சீரழிவு, அதிமுக அரசின் டாஸ்மாக் வியாபாரம் இவற்றால் ஈரோடு -நாமக்கல் மாவட்ட விசைத்தறித் தொழில் கடும் பாதிப்புக்குள்ளாகி, அதனை நம்பி இருந்த அனைவரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.
இதனால் ஏற்பட்டுள்ள கொடிய வறுமை நிலையை எதிர்கொள்வதற்காக, பெண்கள் தங்கள் கருமுட்டையை விற்பனை செய்யும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்ற நெஞ்சைப் பிளக்கும் செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, சிறுநீரகத்தை விற்பனை செய்யும் அவலமும் தொடர்கிறது. பெண்களின் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கி, குடும்பங்களில் வன்முறையை விதைக்கும் இந்த அவலம் எப்போது முடிவுக்கு வரும்?
பெயரளவுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாடுவோர் இந்த விவகாரத்தின் மீது உண்மையான அக்கறையைச் செலுத்துவார்களா?”
இவ்வாறு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.