தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராவதற்கு இன்று ஒருநாள் மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்று விசாரணை ஆணைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க மக்கள் பேரணியாகச் சென்றபோது வன்முறை ஏற்பட்டது. அப்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு நேரில் சென்றார். பின்னர், சென்னை திரும்பிய அவர், ''போராட்டத்தில் சில விஷமிகள் ஊடுருவினர். பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தினர், போலீஸாரைத் தாக்கிய பிறகுதான் இந்தச் சம்பவமே நடந்தது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது கடைசி நாளில் ஊடுருவியதுபோல் இதிலும் கடைசி நாளில் சமூக விரோதிகள் ஊடுருவிக் கலவரத்தை ஏற்படுத்தினர். சில போராட்டங்கள் தூண்டப்படுகின்றன. ஆனால், மக்கள் கவனமாக இருக்க வேண்டும்'' என்று பேசினார்.
இது சர்ச்சையைக் கிளப்பியது.
இந்நிலையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் ஒருநபர் ஆணையம் முன்பாக ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால், நேரில் ஆஜராவதலிருந்து ரஜினிகாந்த் விலக்கு கேட்டார்.
இந்நிலையில், இன்று காலை ரஜினியின் வழக்கறிஞர் இளம்பாரதி அளித்த பேட்டியில், விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராவதற்கு நடிகர் ரஜினிகாந்த் விலக்கு கோரி தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்டதாகக் கூறினார். ஆனால், தற்போது விசாரணை ஆணையமோ முழுமையான விலக்கு அல்ல இன்றைக்கு மட்டுமே விலக்கு என்று விளக்கியுள்ளது.
இது தொடர்பாக, விசாரணை ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "நடிகர் ரஜினிகாந்த் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராக முடியாது என்று தனது வழக்கறிஞர் மூலம் விளக்க மனு அளித்திருந்தார். அதில் இரண்டு காரணங்களைக் குறிப்பிட்டிருந்தார். ஒன்று, தான் வருவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் எனக் கூறியிருந்தார். இரண்டாவதாக, தான் ஏற்கெனவே தொழில் நிமித்தமாக தேதிகள் ஒதுக்கியிருப்பதைக் குறிப்பிட்டிருந்தார்.
முதல் காரணத்தை ஆணையம் ஏற்கவில்லை. ஏனென்றால் இதற்கு முன்னர் பெரிய அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ளனர். யார் ஆஜரானாலும் அவர்களுக்கும் பொதுமக்களுக்குமான பாதுகாப்பு ஏற்பாட்டை சிறப்பாகச் செய்ய காவல்துறை தயாராக இருக்கிறது.
ஆனால், இரண்டாவது காரணத்தை ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று மட்டும் அவர் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், அவருக்குத் தோதான மற்றொரு நாளில் விசாரணைக்கான தேதி ஒதுக்கப்பட்டு சம்மன் அனுப்பப்படும். அப்போது அவர் நேரில் ஆஜராக வேண்டும்.
இப்போதைக்கு அவரிடம் கேட்கக்கூடிய கேள்விகளை வழக்கறிஞர் வாயிலாக சீலிட்ட கவரில் கொடுத்துள்ளோம். அதற்கு அவர் பதில்மனு தாக்கல் செய்வதாகக் சொல்லியிருக்கிறார். இதற்கு முன்னர் 400-க்கு மேற்பட்டோருக்கு இந்த நடைமுறையைப் பின்பற்றியுள்ளோம். பதில் மனு அளித்துவிட்டு பின்னர் ஆஜராவார்கள். அந்த பதில்மனுவின் அடிப்படையில், அவர்களிடம் விசாரணை மேற்கொள்வோம். அதனால், ரஜினியும் பதில் மனு தாக்கல் செய்த பின்னர் மீண்டும் சம்மன் அனுப்பி அவர் நேரில் ஆஜராகும்போது பதில் மனு அடிப்படையில் விசாரணை நடத்தப்படும்.
ரஜினி ஒரு பொறுப்பான மனிதர். சட்டத்தை மதிப்பவர். அவர் ஏற்கெனவே அளித்த பேட்டிகளில் கூட விசாரணை ஆணையத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்றே கூறியுள்ளார்.
அதனால், அவர் விசாரணைக்கு நிச்சயமாக நேரில் ஆஜராவார் என நம்புகிறோம். அவருடைய சாட்சியம் முக்கியமானதாக இருப்பதாலேயே அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளோம். அவர் கூறிய சில கருத்துகள் இந்த ஆணைய விசாரணைக்கு மிக அவசியமாகத் தேவைப்படுவதாலேயே அவரை அழைத்துள்ளோம். தேதி பின்னர் அறிவித்து சம்மன் அனுப்பப்படும். அவர் சென்னையில் ஆஜராவதற்கு அனுமதி கேட்கவில்லை.
ரஜினிகாந்துக்கு நேரில் ஆஜராவதிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதன் அடிப்படையிலேயே இந்த விளக்கத்தை நாங்கள் தருகிறோம்" என்றார்.