அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு குற்றவாளிகள் தங்களுக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு சென்னையை உலுக்கிய அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் கடந்த 3-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.
சென்னை அயனாவரம் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த சிறுமியை அங்கு பணியாற்றிய லிப்ட் ஆப்ரேட்டர் உள்ளிட்ட 17 பேர் கொண்ட கும்பல் ஆறு மாதங்களுக்கு மேலாக பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
வழக்கு விசாரணையின்போது ஒருவர் உயிரிழக்க, ஒருவர் விடுவிக்கப்பட மீதமுள்ள 15 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. அரசுத் தரப்பு வழக்கறிஞர் ரமேஷ், விசாரணை அதிகாரிகளின் சிறப்பான பங்களிப்பால் உச்சபட்ச தண்டனை கிடைத்தது. இந்த வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 9 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதில் ஏற்கெனவே 5 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து உமாபதி என்பவர் மேல் முறையீடு செய்திருந்தார். இந்நிலையில், ஐந்து ஆண்டு தண்டனையை ரத்து செய்யக் கோரி லிப்ட் ஆப்ரேட்டர் தீனதயாளன், வீட்டு வேலை செய்த ஜெயராமன் ஆகிய இருவரும் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்த முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அவர்களது மனுவில் தங்களுக்கு எதிராக நேரடி ஆதாரங்கள் இல்லை என்பதால், தண்டனையை நிறுத்தி வைத்து தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என இருவரும் கோரியுள்ளனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சுப்பையா அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க அயனாவரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டது.