சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் உள்ள மொய்தீன் பாத்திமா என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த ஜனவரி 8-ம் தேதி பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் அதே மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ஷமீம், தவுபீக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, கத்தி போன்றவை கைப்பற்றப்பட்டன. தவுபீக், அப்துல் ஷமீம் இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, டெல்லி, மகாராஸ்டிரா மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனால் இவ்வழக்கு என்ஐஏவு-க்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் உள்ள மொய்தீன் பாத்திமா என்பவரது வீட்டில் என்ஐஏசோதனை நடைபெற்று வருகிறது.
எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதான ஷமீம், தவுபிக் இருவரும் பாத்திமா வீட்டில் தங்கி இருந்ததாக கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது.