ப.சிதம்பரம்: கோப்புப்படம் 
தமிழகம்

சிஏஏ குறித்து அரசு பொய் சொல்கிறது; எப்படி மன்னிக்க முடியும்? - ப.சிதம்பரம் பேச்சு

செய்திப்பிரிவு

குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து அரசு பொய் சொல்கின்றது என, முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

'அரசியலமைப்பைக் காப்பாற்றுங்கள்; ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்' என்ற தலைப்பில் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள கேரள சமாஜில் நேற்று (பிப்.23) கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ப.சிதம்பரம், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம், இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்கும் இடையிலானது என்றும், இந்தச் சட்டத்தால் இந்தியர்களுக்குப் பாதிப்பில்லை என அரசு பொய் சொல்கிறது எனவும் கூறினார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் பற்றி உண்மையை மறைக்கிறார்கள் அல்லது திரித்துப் பேசுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என, ப.சிதம்பரம் தெரிவித்தார்.

இது தொடர்பாக கேரள சமாஜத்தில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் ப.சிதம்பரம் பேசியதாவது:

"இந்தச் சட்டத்தைப் பற்றி அரசு பொய் சொல்கிறது. அமைச்சர்கள் பொய் சொல்கிறார்கள். இந்தச் சட்டத்தைப் பற்றிப் பேசும் பல பேர், இந்தச் சட்டத்தைப் படித்ததே கிடையாது. அதனால்தான் அரசு துணிச்சலாகப் பொய் சொல்கிறது. இதில் பெரிய பொய் என்னவென்றால், இந்தியாவில் இருக்கும் மக்களை இந்தச் சட்டம் பாதிக்காது என்பதுதான். பிறகு எந்த நாட்டு மக்களை இச்சட்டம் பாதிக்கும்? ஆப்பிரிக்க நாட்டு மக்களையா?

இச்சட்டம் இந்தியாவில் இன்று இருப்பவர்களுக்குத்தான் பொருந்துமே தவிர, நாளை வருபவர்களுக்குப் பொருந்தாது. இச்சட்டம் இந்தியாவில் இருப்பவர்களைப் பாதிக்காது என அமைச்சர்கள் சொல்வது முற்றிலும் பொய். தவறு என்றால் கூட மன்னிக்கலாம். பொய் சொன்னால் எப்படி மன்னிக்க முடியும்? தவறு வேறு, பொய் வேறு.

இந்தச் சட்டம் செல்லாது என நாங்கள் நம்புகிறோம். அரசியலமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவுக்கு இது நேர் விரோதமானது என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். உச்ச நீதிமன்றம் இதை மதத்தின் அடிப்படையில் பாகுபாடு என இந்தச் சட்டம் செல்லாது என அறிவிக்கும் என்று நம்புகிறோம்".

இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.

SCROLL FOR NEXT