குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் நடந்து வரும் போராட்டம் நேற்று 10-வது நாளை எட்டி தொடர்ந்து நடந்து வருகிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்திலும் எதிர்க்கட்சி மற்றும் சில அமைப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற கோரி முஸ்லிம்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வண்ணாரப்பேட்டை, கண்ணன் ரவுண்டானா அருகே கடந்த 14-ம் தேதி போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை கலைந்து போகுமாறு போலீஸார் எச்சரித்தனர். தொடர்ந்து போராட்டம் நடந்ததால் போலீஸார் தடியடி நடத்தினர்.
இதைக் கண்டித்தும் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்தும் தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. பின்னர் சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் நடத்த பேரணி நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சேப்பாக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், வண்ணாரப்பேட்டையில் நடந்து வரும் போராட்டம் நேற்று 10-வது நாளை எட்டியது. அங்கு தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. இதையொட்டி அந்த பகுதியில் போலீஸார் அதிக அளவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.