தமிழகம்

கோயம்பேடு சந்தையில் முள்ளங்கி, முட்டைக்கோஸ் ரூ.10-க்கு விற்பனை

செய்திப்பிரிவு

கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரித்திருப்பதால் முள்ளங்கி, முட்டைக்கோஸ் ஆகியவற்றின் விலை கிலோ ரூ.10 ஆக குறைந்துள்ளது.

கோயம்பேடு சந்தையில் தற்போது காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளது. அதன் காரணமாக பல்வேறு காய்கறிகளின் விலை குறைந்து வருகின்றன.

ஏற்கெனவே பெரிய வெங்காயம் மற்றும் சாம்பார் வெங்காயத்தின் விலை தொடர்ந்து இறங்கு முகமாக இருந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து பீட்ரூட்டின் விலையும் குறைந்தது. தற்போது முள்ளங்கி, முட்டைக்கோஸ் ஆகியவற்றின் விலையும் குறைந்துள்ளது. நேற்று இவ்விரு காய்கறிகளும் கிலோ ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டது.

மற்ற காய்கறிகளான தக்காளி, புடலங்காய் தலா ரூ.15, பெரிய வெங்காயம் ரூ.26, சாம்பார் வெங்காயம் ரூ.38, கத்தரிக்காய் ரூ.20, உருளைக்கிழங்கு ரூ.16, அவரைக்காய், பீன்ஸ் தலா ரூ.30, வெண்டைக்காய், பாகற்காய் தலா ரூ.25, கேரட் ரூ.24, பீட்ரூட், பச்சை மிளகாய் தலா ரூ.11, முருங்கைக்காய் ரூ.70 என விற்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT