தமிழகம்

ராமேசுவரம் கோயிலில் பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் சாமி தரிசனம்

எஸ்.முஹம்மது ராஃபி

'தலைவி' படத்தின் படப்பிடிப்பிற்காக தமிழகத்தில் முகாமிட்டுள்ள பாலிவுட் முன்னணி நடிகை கங்கணா ரணாவத் ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் புனித நீராடி, சாமி தரிசனம் செய்தார்.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு 'தலைவி' என்ற படம் தயாராகிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகவுள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கி வரும் இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் முன்னணி நடிகை கங்கணா ரணாவத் நடித்து வருகிறார்.

'தலைவி' படப்பிடிப்பிற்காக தமிழகத்தில் முகாமிட்டுள்ள கங்கணா ரணாவத் கடந்த 21-ம் தேதி மாசி மகா சிவராத்திரி அன்று கோயம்புத்தூர் வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சிவனை வழிபட்டார்.

தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரம் வந்த கங்கணா ரணாவத் ராமநாதசுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஜோதிர் லிங்க சிவனை வழிபட்டு பின்னர் கோயிலிலுள்ள தீர்த்தங்களில் புனித நீராடினார்.

தொடர்ந்து ராமேசுவரம் அருகே பேக்கரும்பில் உள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

SCROLL FOR NEXT