அமைச்சர் செல்லூர் ராஜூ, ஸ்டாலின் | கோப்புப் படம். 
தமிழகம்

மக்களை மதரீதியில் பிரிக்கிறது திமுக: அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு 

செய்திப்பிரிவு

சிறுபான்மையினர் வாக்குகளைப் பெறுவதற்காக மக்களை மதரீதியில் பிரித்து திமுக உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரையில் செயின்ட் மேரீஸ் தேவாலயத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தெளிவுபடுத்திவிட்டனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் போல, இஸ்லாமியர்களின் பாதுகாப்பு அரணாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார்.

மக்களுக்காகத்தான் மத்திய அரசுடன் அதிமுக இணக்கமாக உள்ளது. அதிமுக யார் கையிலும் இல்லை. மக்கள் கையில் மட்டுமே உள்ளது'' என்றார் அமைச்சர் செல்லூர் ராஜூ.

முன்னதாக, அதிமுகவுக்கான மக்கள் ஆதரவை பொறுத்துக் கொள்ள முடியாமல், பொய் பிரச்சாரங்கள் மூலம் முஸ்லிம்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது என்றும், சமூக நல்லிணக்கத்தை காப்பாற்ற முஸ்லிம்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தெரிவித்தனர்.

இந்நிலையில், சிஏஏ குறித்து முதல்வரும் துணை முதல்வரும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை யாரை ஏமாற்றுவதற்கான நாடக ஒத்திகை என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இந்த சூழலில் ஸ்டாலினுக்குப் பதில் தரும் வகையில் மக்களை மதரீதியில் பிரிக்கிறது திமுக என்று அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.

SCROLL FOR NEXT