கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலம் அமைய வெளியிட்ட குறிப்பாணையை தமிழக அரசு நேற்று ரத்து செய்திருப்பது மதிமுக தொடர்ந்து குரல் எழுப்பியதற்கு கிடைத்த வெற்றி ஆகும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:
''கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய ரசாயனம் மற்றும் ரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் (Petroleum, Chemicals and Petro Chemicals Investment Region - PCPIR) அமைப்பதற்கு 2017 ஜூலை 19 ஆம் தேதி தமிழக அரசு குறிப்பாணை (எண்.29) வெளியிட்டது. அதில் கடலூர், நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களில் உள்ள 57 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
கடலூர் மாவட்டத்தில் கடலூர், புவனகிரி, சிதம்பரம் வட்டங்களிலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களிலும் 318 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 57,500 ஏக்கர் விளைநிலங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, வேளாண்மைத் தொழிலே அழிந்துபோகும் என்பதால், பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலம் அமைக்கும் குறிப்பாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று 2017 ஜூலை 24 இல் நான் அறிக்கை வெளியிட்டேன்.
பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடக் கோரி, 2017 ஜூலை 31 இல் கடலூரில் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
காவிரிப் படுகை மாவட்டங்கள் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டவுடன், பிப்ரவரி 10 ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில், “வேளாண் பாதுகாப்பு மண்டலம் அறிவிப்பதற்கு உண்மையாக அக்கறை இருந்தால், 2017 ஜூலை 19 இல் பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலம் அமைக்க 57,500 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு வெளியிட்ட குறிப்பாணை எண்.29ஐ திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தினேன். மீண்டும் பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையிலும் சுட்டிக் காட்டி இருக்கிறேன்.
மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பிப்ரவரி 15 இல் நடந்தபோது, அதிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில், வேளாண் பாதுகாப்பு சிறப்பு மண்டலம் பற்றிய சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து பிப்ரவரி 21 இல் வெளியிட்ட அறிக்கையிலும், பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலம் அமைக்க ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் தமிழக அரசு போட்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் என்று சுட்டிக் காட்டினேன்.
கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலம் அமைய வெளியிட்ட குறிப்பாணையை தமிழக அரசு நேற்று ரத்து செய்திருப்பது மதிம்க தொடர்ந்து குரல் எழுப்பியதற்கு கிடைத்த வெற்றி ஆகும்.
காவிரிப் படுகை மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருக்க வேண்டுமானால் 2018 அக்டோபர் 1 ஆம் தேதி மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சார்பில் வேதாந்தா குழுமம் மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுடன் ஹைட்ரோ கார்பன் எடுக்க போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகின்றேன்''.
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.