சென்னை எம்.ஜி.ஆர். நகரில் பள்ளிக்கூடம் அருகே இயங்கி வந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர், ஒரு கட்டத்தில் அந்தக் கடையை இழுத்து மூடினர்.
சென்னை எம்.ஜி.ஆர். நகர், சூளைப்பள்ளம் பச்சையப்பன் தெருவில் பள்ளிக்கூடம் அருகே இயங்கி வந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சென்னை மேற்கு மாவட்ட தேமுதிக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் தேமுதிக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஏ.எம்.காமராஜ் தலைமையில் 100-க்கும் அதிகமான கட்சித் தொண்டர்கள் பங்கேற்றனர்.
காலை 10.30 மணிக்கு தொடங்கிய ஆர்ப்பாட்டம், மதியம் 1.30 மணி வரை நீடித்தது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிகாரிகள் யாரும் வராததையடுத்து, சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை தேமுதிகவினர் இழுத்து மூடினர். பின்னர் ஏ.எம்.காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் மதுவால் பல்வேறு தீமைகள் ஏற்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடையில் இருந்த மதுக்கடையை அகற்றக்கோரி செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள், போராட்டத்தின்போதே மரணமடைந்தார். நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்தக் கடை அகற்றப்படவில்லை.
அதேபோல், சென்னை எம்.ஜி.ஆர். நகர் மற்றும் நெசப்பாக்கம் ஆகிய பகுதிகளில் பள்ளிகளுக்கு அருகே இயங்கி வந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு வெளியாகி ஒராண்டு ஆகிவிட்டது. எனினும் அந்தக் கடைகள் அகற்றப்படவில்லை. எனவே, ஆர்ப்பாட்டம் நடத்தி கடையை இழுத்து மூடினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.