கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சியில், பாஜக-வில் இணைந்த சந்தன வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கு உறுப்பினர் அட்டை வழங்குகிறார் பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ். 
தமிழகம்

சந்தன வீரப்பன் மகள்பாஜகவில் இணைந்தார்

செய்திப்பிரிவு

சந்தன வீரப்பன் மகள் வித்யாராணி, கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் முன்னிலையில் பாஜக-வில் இணைந்தார்.

கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சியில், பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். சந்தன வீரப்பனின் மகள் வித்யா ராணி, பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட பலர் பாஜகவில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் முரளிதரராவ் பேசியது: குடியுரிமை சட்டத்தில், இந்தியாவில் அல்லது தமிழகத்தில் வாழும் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஏதேனும் ஒரு வரி இருப்பதை திமுக தலைவர் ஸ்டாலின் நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலகி வனவாசம் செல்லத் தயார்.

தமிழகத்திலும், மத்தியிலும் திமுகவின் கூட்டணி ஆட்சி நடந்தபோது தான் இலங்கையில் 1.5 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். தற்பொழுது இலங்கைத் தமிழர்களின் குடியுரிமை பற்றி ஸ்டாலின் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவில் இருந்த முஸ்லீம்கள் மற்றும் மசூதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதா அல்லது அதிகரித்துள்ளதா? அதேநேரம், பாகிஸ்தானில் சுதந்திரத்துக்கு பிறகு 24 சதவீதமாக இருந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அந்நாட்டின் சிறுபான்மையினர் தற்போது 2 சதவீதமாக குறைந்துள்ளனர். அந்நாட்டில் இந்துக்கள் ஆபத்தில் உள்ளனர். அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி அங்குள்ள இந்துக்கள் இந்தியா வந்தால் வருவோருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று காந்தியடிகள் கூறியிருந்தார். அந்த வழியில்தான் இன்று பிரதமர் மோடி செயல்படுகிறார் என்றார்.

SCROLL FOR NEXT