தமிழகம்

முரசொலி நிலம் தொடர்பாக அவதூறு வழக்கு; பாமக நிறுவனர் ராமதாஸ் மார்ச் 20-ல் ஆஜராக சம்மன்

செய்திப்பிரிவு

முரசொலி நிலம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் ஆகியோருக்கு எதிராக திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில், இருவரும் மார்ச் 20-ல் நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் சம்மன் பிறப்பித்துள்ளது.

முரசொலி அலுவலகம் உள்ள இடம் பஞ்சமி நிலம் எனக் கூறி பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசனும் விமர்சித்ததோடு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணை யத்திலும் புகார் அளித்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி அவதூறு பரப்பியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜக நிர்வாகி சீனிவாசன் ஆகியோருக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை அறங்காவலரான ஆர்.எஸ்.பாரதி, எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற 14-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம், ராமதாஸ், சீனிவாசன் இருவரையும் மார்ச் 20-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT