தமிழகம்

பிப்.24 - மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்- அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

செய்திப்பிரிவு

முன்னாள் முதல்வர் ஜெயலலி தாவின் பிறந்த நாளான பிப். 24-ம் தேதி ‘மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக’ அறிவிக்கப்பட்டதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

சட்டப்பேரவையில் கடந்த 19-ம்தேதி பேரவை விதி 110-ன் கீழ் அறிக்கை அளித்த முதல்வர் பழனிசாமி, பெண் குழந்தைகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதியை ஆண்டுதோறும் ‘மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக' அனுசரிக்க அதிமுக அரசு முடிவு செய்துள்ளது.

5 திட்டங்கள் செயல்படுத்தப்படும்

அதன்படி 21 வயதான ஆதரவற்ற பெண்களுக்கு ரூ.2 லட்சம்,18 வயதுக்குப் பிறகு அரசு குழந்தைகள் இல்லத்திலிருந்து வெளியேறும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, பொருளாதார நிலைக்கு உதவ மேற்படிப்பு, திறன் மேம்பாட்டு பயிற்சி, வேலைவாய்ப்பு, சுயதொழில் அடங்கிய சிறப்புத் தொகுப்பு,

ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரிக்கும் வளர்ப்பு பெற்றோர்களுக்கான மாத உதவித் தொகை ரூ.4 ஆயிரமாக உயர்வு, பெண் சிசுக் கொலையை குறைக்கும் மாவட்டங்களுக்குப் பரிசு, அனைத்து குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் உள்ள ஆதரவற்ற, கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை ஆகிய 5 திட்டங்கள் செயல்படுத்தப்படும்" என்று அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து இந்த அறிவிப்புக்கு தமிழக அரசின் சமூக நலம், சத்துணவுத் திட்டத்துறை செயலாளர் எஸ்.மதுமதி,கடந்த 20-ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளார். அதன்படி ஒவ்வோர் ஆண்டும் பிப்.24-ம் தேதி, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அனுசரிக்கப்படும்.

நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

அன்றைய தினம், பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி மனித சங்கிலி, உறுதிமொழி ஏற்பு, பேரணிகள், கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள், தெரு நாடகங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் அரசாணை யில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT