தமிழகம்

லட்சக்கணக்கான பக்தர்களுடன் ஈஷாவில் பிரம்மாண்ட மகா சிவராத்திரி- விடிய விடிய நடந்த கலை நிகழ்ச்சிகள்; சிறப்பு ஏற்பாடுகள்

செய்திப்பிரிவு

கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை மகா சிவராத்திரி விழா பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி, மஹாசிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக விமரிசையாக இவ்விழா கொண்டாடப்படுகிறது. 26-ம் ஆண்டு மகா சிவராத்திரி விழா நேற்று முன்தினம் மாலையில் தொடங்கி நேற்று காலை 6 மணி வரை நடைபெற்றது.

ஈஷா யோகா மையத்தில் உள்ளதியானலிங்கத்தில் பஞ்ச பூதஆராதனையுடன் விழா தொடங்கியது. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, சூரிய குண்டம், நாகா சந்நிதி, லிங்க பைரவி, தியானலிங்கத்தை தரிசித்துவிட்டு, பஞ்ச பூத ஆராதனையில் கலந்துகொண்டார்.

ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிலை முன்மகா சிவராத்திரி விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. முதல் நிகழ்ச்சியாக லிங்க பைரவி தேவியின் மகா யாத்திரை நடைபெற்றது. தொடர்ந்து, ‘மரணம்’ தொடர்பாக ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு எழுதிய 'Death - An Inside Story' என்ற ஆங்கிலப் புத்தகத்தை குடியரசு துணைத் தலைவர் வெளியிட்டார்.

விழாவில் சத்குரு பேசும்போது, "மகா சிவராத்திரியன்று வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இருப்பதே நமக்கு கிடைத்திருக்கும் அருள். மகா சிவராத்திரி இரவு வெறுமனே விழித்திருக்கும் இரவாக இல்லாமல், விழிப்புணர்வுடன் இருக்கும் இரவாக அமையவேண்டும். நமக்குள் இருக்கும் அனைத்து தடைகளையும் உடைப்பதற்கு இந்த இரவு உறுதுணையாக இருக்கும். தமிழகம் பக்தி மிகுந்த மாநிலமாகத் திகழ்கிறது. தமிழக அரசின் சின்னத்தில் கோயில் இருப்பதே இதற்கு உதாரணம். ஒவ்வொருவரும் தங்களது வீட்டையே கோயிலாக வைத்திருக்க வேண்டும்" என்றார்.

விழாவில், இமாச்சலப் பிரதேச ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங் ஷெகாவத், அஸ்வினி குமார்,தமிழக அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் சீனிவாசன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

மகா சிவராத்திரியின் முக்கிய நிகழ்வான நள்ளிரவு தியானத்தில் லட்சக்கணக்கான மக்கள்பங்கேற்று, மந்திர உச்சாடனம் மற்றும் சில தியானங்களை மேற்கொண்டனர். பிரபல நாட்டுப்புற பாடகர் அந்தோணிதாசன், திரைப் பாடகர் கார்த்திக், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாடகி அனன்யா பட் ஆகியோரது பாடல்கள், கபீர் கபே குழுவினரின் துள்ளலான இசை நிகழ்ச்சி, ஈஷா சம்ஸ்க்ருதி மாணவர்களின் களரி மற்றும் நாட்டிய நிகழ்ச்சி, தேவார இசைப் பாடல்கள் என விடிய விடிய பாடல், நடன நிகழ்ச்சிகள் களைகட்டின.

112 அடி உயர ஆதியோகி சிலைக்கு ஒரு வருடமாக அணிவிக்கப்பட்டிருந்த 1 லட்சத்து 8 ருத்ராட்ச மணிகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. 350-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நாட்டு மாடுகளின் கண்காட்சியும் நடைபெற்றது. லட்சக்கணக்கான இருசக்கர வானங்கள், நான்குசக்கர வாகனங்களில் பொதுமக்கள் திரண்டு வந்ததால், கோவையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈஷா யோகா மையத்துக்குச் செல்லும் வழியில், பல கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்துக் காத்திருந்தன. இதனால்விழாவுக்குச் சென்ற ஆயிரக்கணக்கானோர் பல கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்தே செல்ல வேண்டியிருந்தது. மேலும், பல பகுதிகளில் வாகனங்கள் திசை திருப்பிவிடப்பட்டதால், பேரூர் சாலை, தொண்டாமுத்தூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

SCROLL FOR NEXT