மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பிப்ரவரி 29-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிவிப்பில், ''திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 29-2-2020 சனிக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம் ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அதுபோது, திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்'' என்று அன்பழகன் தெரிவித்துள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும், தொகுதி சார்ந்த பிரச்சினைகளில் திமுக எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.