தமிழகம்

மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் தேரோட்டம்

செய்திப்பிரிவு

ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) தேரோட்டம் நடைபெற்றது.

தென் இந்தியாவின் காசி என்றழைக்கப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் நடைபெறும் முக்கியமான திருவிழாக்களில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த பிப்ரவரி 14-ல் துவங்கியது.

12 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் ஒன்பதாவது திருநாளான தேரோட்டத்தை முன்னிட்டு சனிக்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ஐந்து கால பூஜைகளும் நடைபெற்றன.

காலை 9.30 மணியளவில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் அலங்கரிக்கப் பட்ட தேர்களில் எழுந்தருளினர். பின்னர் ராமநாதசுவாமி கோவில் தக்கார் ராஜாகுமரன் சேதுபதி தேரின் வடத்தை இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவ, சிவ கோஷங்களுடன் தேரை இழுத்தனர்.

அதனைத் தொடர்ந்து ராமநாதசுவாமி மற்றும் அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் நான்கு ரத வீதியில் வலம் வந்தனர். தேரோட்டத்தை நிறைவடைந்ததும் பகல் ஒரு மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாசி அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்த கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

மேலும் திருவிழாவையோட்டி தினமும் தெற்கு நந்தவன திருக்கல்யாண மண்டபத்தில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

எஸ். முஹம்மது ராஃபி

SCROLL FOR NEXT