திமுக தலைவர் ஸ்டாலின் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கைப்பாவையாக உள்ளார் என பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் விமர்சித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் மாற்றுக் கட்சிகளில் இருந்து பாஜகவில் இணையும் கூட்டம் இன்று (பிப்.22) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் வீரப்பனின் மூத்த மகள் வித்யா ராணி மற்றும் பாமகன் முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் சிவகுமார், மீசை அர்ஜுனன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்.
பின்னர் மாற்றுக் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்தவர்கள் முன்னிலையில் பேசிய தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் பேசியதாவது:
"தமிழகத்தில் பொய் கூறி இனி ஸ்டாலினால் எதுவும் செய்ய இயலாது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் இந்திய நாட்டிலோ, தமிழகத்திலோ வாழக்கூடிய முஸ்லிம்களுக்கு எதிராக ஏதேனும் ஒரு வரி இருப்பதை திமுக தலைவர் ஸ்டாலின் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகி வனவாசம் போகத் தயார்.
தமிழகத்திலும் மத்தியிலும் திமுகவின் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது தான் இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இதற்கு ஸ்டாலினால் பதில் கூற முடியுமா? தற்பொழுது இலங்கைத் தமிழர்களின் குடியுரிமை பற்றி ஸ்டாலின் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
1947 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவில் அப்போது இருந்த முஸ்லிம்கள் மற்றும் மசூதிகளின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளதா அல்லது அதிகரித்து உள்ளதா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஆனால், பாகிஸ்தானில் சுதந்திரத்திற்குப் பிறகு 24 சதவீதமாக இருந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அந்நாட்டு சிறுபான்மை மக்களின் எண்ணிக்கை 2 சதவீதமாக குறைந்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் ஆபத்தில் இருக்கின்றனர். அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமானால் அங்குள்ள இந்துக்கள் இந்தியா வந்தால் பாதுகாப்பு அளிக்கப்படும் என மகாத்மா காந்தி தெரிவித்துள்ளார். அந்த வழியில்தான் தற்பொழுது பிரதமர் மோடியும் அங்கு சிறுபான்மையாக இருக்கக்கூடிய மக்கள் இந்தியா வந்தால் குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கிறார்.
இதனால் ஸ்டாலினுக்கு தலைவலியும் வயிற்றுவலியும் ஏன் வருகிறது? தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மோடியின் கைப்பாவை என ஸ்டாலின் விமர்சிக்கிஸார். தமிழக முதல்வர் பாரதப் பிரதமரை தன் கையில் வைத்துக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லையே? ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் பாகிஸ்தானில் இருக்கும் இம்ரான் கானுக்கு கைப்பாவையாக இருக்கிறார். அவ்வாறு செயல்படும் ஸ்டாலினுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்".
இவ்வாறு முரளிதரராவ் பேசினார்.