தென்காசியில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியை ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தொடங்கிவைத்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தென்காசி பிரிவு சார்பில் 2019-20ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான குழு மற்றும் தடகள விளையாட்டு போட்டிகள் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்படுகிறது.
தென்காசி ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
போட்டியை தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தொடங்கிவைத்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜேஷ் வரவேற்றுப் பேசினார். டென்னிஸ் பயிற்றுநர் குமர மணிமாறன் நன்றி கூறினார்.
ஆண்களுக்கான தடகள போட்டி மற்றும் கபடி போட்டி தென்காசி ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கூடைப்பந்து போட்டி செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ் மேல்நிலைப் பள்ளியிலும், கைப்பந்து மற்றும் பேட்மிட்டன் போட்டி இலஞ்சி ஆர்.பி.மேல்நிலைப் பள்ளியிலும், டென்னிஸ் மற்றும் குத்துச்சண்டை போட்டி குற்றாலம் சையது ரெசிடன்சியல் பள்ளியிலும், ஜூடோ போட்டி இலத்தூர் பாரத் மகளிர் கல்வியியல் கல்லூரியிலும், ஹாக்கி போட்டி இலத்தூர் வேல்ஸ் வித்யாலயா பப்ளிக் பள்ளியிலும் நடைபெற்றது.
பெண்களுக்கான போட்டிகள் நாளை நடைபெறுகிறது. தடகளம் தென்காசி ஐசிஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கூடைப்பந்து, கைப்பந்து, கபடி, பேட்மிட்டன் போட்டிகள் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
டென்னிஸ், குத்துச்சண்டை போட்டிகள் குற்றாலம் சையது ரெசிடென்சியல் பள்ளியிலும், ஜடோ போட்டி இலத்தூர் பாரத் மகளிர் கல்வியியல் கல்லூரியிலும், ஹாக்கி போட்டி இலத்தூர் வேல்ஸ் வித்யாலயா பப்ளிக் பள்ளியிலும் நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் 945 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.