பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

பெட்ரோலிய முதலீட்டு மண்டலம்: அரசாணையை ரத்து செய்தது தமிழக அரசு

செய்திப்பிரிவு

கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் அரசாணையை தமிழக அரசு ரத்து செய்தது.

கடலூர், நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களில் 57 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பெட்ரோலிய ரசாயனம், பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் அமைக்க 2017-ல் தமிழக அரசு ஒப்புதல் அளித்திருந்தது.

இந்தத் திட்டத்தின் மூலம், அந்த கிராமங்களில் பெட்ரோலியம், பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் தொழிற்சாலை, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் ஆகியவற்றை அமைத்து, எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். மேலும், அப்பகுதிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படும் எனத் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த அறிவிப்பால் கடலூர், நாகை மாவட்டங்கள் கடுமையான சுற்றுச்சூழல் விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என, சூழலியல் அமைப்புகள் எச்சரித்தன. இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்ற தமிழக அரசு அண்மையில் சட்டம் இயற்றியது. அதில், காவிரி டெல்டா பகுதிகளில் அனுமதிக்கப்படாத தொழில்களில் பெட்ரோலியம் தொடர்பான தொழில்கள் குறிப்பிடப்படவில்லை.

இதையடுத்து, பெட்ரோலிய முதலீட்டு மண்டலத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. இந்நிலையில், இன்று (பிப்.22) கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் அரசாணையை தமிழக அரசு ரத்து செய்தது.

SCROLL FOR NEXT