திருச்செந்தூரின் புதிய அடையாளம் பா.சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார்.
தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் திருச்செந்தூா் அருகேயுள்ள வீரபாண்டியன் பட்டினத்தில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் செலவில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அமைக்கப்பட்டது.
இந்த மணிமண்டபத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திறந்து வைத்தார்.
பின்னர் விழாவில் பேசிய செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, "திருச்செந்தூரின் புதிய அடையாளமாக பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திகழும்.
சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்ட தலைவர்கள் பிறந்த மண் தூத்துக்குடி. அந்த மண்ணில் தோன்றியவர் மூலம் பாமர மக்களுக்கும் எளிதில் தமிழைக் கொண்டு சேர்த்த நாளிதழ் தினத்தந்தி" என்றார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா வழியில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார் என்றும் பாராட்டிப் பேசினார்.
விழாவில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசும்போது, "திருச்செந்தூரின் கடலோரத்தில் சிவந்தி ஆதித்தனார் அரசாங்கம்" என்று சொல்ல அரங்கம் அதிர கைதட்டு ஒலித்தது.
தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர் பா.சிவந்தி ஆதித்தனார் என அமைச்சர் பாண்டியராஜன் புகழாரம் சூட்டினார்.