பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு

செய்திப்பிரிவு

காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவது தொடர்பான சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் பெற்று அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு.

காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவது தொடர்பான சட்ட மசோதா கடந்த 20-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

அந்த மசோதாவில், "வேளாண் மண்டலத்திற்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வதற்கு 24 உறுப்பினர்களைக் கொண்ட அதிகார அமைப்பு அமைக்கப்படும். முதல்வரைத் தலைவராகக் கொண்டு இந்த அமைப்பு செயல்படும். துணை முதல்வர், சட்டத்துறை, வேளாண் துறை, சுற்றுச்சூழல் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, தொழில் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, மீன்வளத்துறை ஆகிய துறைகளின் அமைச்சர்கள் இக்குழுவின் உறுப்பினர்களாகச் செயல்படுவர்.

விவசாயம் சாராத தொழில்களை இனி காவிரி டெல்டாவில் மேற்கொள்ள முடியாது.

துத்தநாக உருக்காலை, இரும்புத் தாது செயல்முறை ஆலை, ஒருங்கிணைந்த எஃகு ஆலை அல்லது இலகு இரும்பு ஆலை, செம்பு உருக்காலை, அலுமினியம் உருக்காலை, எண்ணெய் மற்றும் நிலக்கரிப் படுகை மீத்தேன் ஆலைகள், பாறைப் படிம எரிவாயு, ஹைட்ரோகார்பன் வாயு எடுத்தல், வாயுக்களின் ஆய்வுகள், துளைத்தெடுத்தல் மற்று பிரித்தெடுத்தல் உள்ளிட்ட ஆய்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 3 மாவட்டங்கள், கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோவில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை மற்றும் குமராட்சி, புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணல்மேல்குடி, திருவரங்குளம் மற்றும் கரம்பக்குடி வட்டாரங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த சட்ட மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. இந்த மசோதாவுக்கு நேற்று ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் அளித்ததையடுத்து அந்த மசோதா சட்டமானது.

இந்நிலையில், இன்று (பிப்.22) பாதுகாக்கப்பட்ட 'வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டத்தை' தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டது.

SCROLL FOR NEXT