மக்கள் அதிகம் கூடும் இடங்கள், சாலையோரங்களில், ‘உங்கள் உடல் எடையை இங்கே பரிசோதித்துக் கொள்ளுங்கள் - எடையை கட்டுக்குள் வைத்திருக்கும் ஆரோக்கிய ஆலோசனைகளை நாங்கள் வழங்குகிறோம்' என்ற பெயரில் ஒரு குடையின்கீழ் உடல் எடை காணும் மின்னணு இயந்திரத்துடன் இரு நபர்கள் கையில் பேனா, குறிப்பேட்டுடன் நிற்பதை கவனித் திருப்பீர்கள்.
அவர்களை அணுகினால் முதலில் உடல் எடையை பரிசோதித்து விட்டு, பெயர் மற்றும் செல்போன் எண்ணை குறித்துக் கொண்டு ஒரு விசிட்டிங் கார்டையோ அல்லது நோட்டீஸையோ உங்களிடம் கொடுப்பர். பின்னர், குறிப்பிட்ட இடத்துக்கு வாருங்கள் அங்கு ஊட்டச்சத்து நிபுணர் இருப்பார், அவர் வழங்கும் ஆலோசனைப்படி சத்து மருந்து குடித்து வந்தால், உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும், சரியான எடையுடன் பராமரிக்கலாம் எனக் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள்.
இப்படி வீதிக்கு வீதி முளைத்திருக்கும் ஆரோக்கிய ஆலோசனை மையங்கள் உணவுப் பாதுகாப்புத் துறையிடமோ, சுகாதாரத் துறையிடமோ எவ்வித அனுமதியும் பெறுவதில்லை.
நாளுக்கு நாள் புதுப்புது நோய்கள் உருவாகி உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் நிலையில், எந்த அங்கீகாரமும் இல்லாமல் உணவுத் தொடர்பான பானங்களை பொதுமக்களுக்கு இந்த ‘ஆரோக்கிய மையங்கள்' எப்படி விநியோகிக்கின்றன? அந்த பானங்களை உட்கொள்ளும்போது பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது போன்று பல்வேறு கேள்விகளை முன்வைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
விருத்தாசலத்தில் ஆரோக்கிய மையம் நடத்தி வரும் ஒருவரிடம் இதுதொடர்பாக கேட்டபோது, ‘‘நாள்தோறும் காலை 7 முதல் 10 மணி வரை பயிற்சி நடைபெறும். அப்போது உடல் நலம் குறித்து ஆலோசனை வழங்குவோம். சில சத்து மருந்து வழங்குவோம். அதை ஊட்டச்சத்து நிபுணர் அறிவுரைப்படி உட்கொள்ள வேண்டும்'' என்றார். ஆனால் தான் ஊட்டச்சத்து நிபுணர் அல்ல; அதற்கான பயிற்சி எடுத்து வருகிறேன் என்றும் அவர் கூறினார்.
பணம் பறிக்கும் திட்டம்
இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் சண்முகக் கனியிடம் கேட்டபோது, ‘‘இது முழுக்கமுழுக்க பணம் பறிக்கும் திட்டத்துடன் செயல்படுகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. ஒரு மருத்துவரின் அறிவுரை இல்லாமல் உடல் எடை குறித்து ஆலோசனையை பெறுவதும் தவறு, வழங்குவதும் தவறு.அவர்கள் பரிந்துரைக்கும் ஆரோக்கிய உணவுகள், பரிசோதனைக் கூடத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தரச்சான்று பெறப்பட்டவையா என்பது நமக்குத் தெரியாது.
அண்மையில் விழுப்புரம் மாவட்டம் பகண்டை கூட்டுச் சாலையில், குழந்தையின்றி இருந்த தம்பதியரை ஆரோக்கிய மையத்துக்கு வரவழைத்து ரூ.40 ஆயிரம் வரை பணம் பறித்துள்ளனர். இது குறித்து தெரியவந்தபோது, காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை மேற்கொண்டோம்.
உடல் நலன் சார்ந்த விஷயத்தில் மக்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுதொடர்பாக எவரேனும் புகார் அளித்தால் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்று தெரிவித்தார். ந.முருகவேல்