தமிழகம்

சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் அகழாய்வில் வேலூர் மாவட்டத்தில் புதிய கற்கால சாம்பல் மேடு கண்டுபிடிப்பு: தமிழகத்தில் முதல்முறையாக கண்டறிந்துள்ளதாக தகவல்

செய்திப்பிரிவு

வ.செந்தில்குமார்

தமிழகத்தில் முதல் முறையாக வேலூர் மாவட்டத்தில் புதிய கற்கால மனிதர்கள் காலத்தைச் சேர்ந்த சாம்பல்மேடு, சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த வலசை கிராமத்தின் சந்தூர் மலையடிவாரத்தில் சென்னைபல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் முதுகலை மாணவர்கள் கடந்த சில நாட்களாக அகழாய்வில் ஈடுபட்டுள்ளனர். இத்துறைத் தலைவர் சவுந்தர்ராஜன் தலைமையில் 21 மாணவ, மாணவியர் நடத்திய அகழாய்வில் 2 இடங்களில்சாம்பல் மேடுகள் கண்டறியப்பட்டன. தமிழகத்தில் முதல்முறையாக கண்டறியப்பட்ட இந்த சாம்பல் மேடு புதிய கற்காலத்தைச் சேர்ந்தது என தெரியவந்துள்ளது.

சாம்பல் மேடு

புதிய கற்காலத்தில் (கி.மு 3,000)கூட்டமாக வாழ்ந்த மனிதர்கள், தாங்கள் வளர்த்த கால்நடைகளின் எச்சங்கள், எலும்புகள் உள்ளிட்ட வற்றை ஓரிடத்தில் கொட்டி எரியூட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆண்டுகள் கடந்த இந்தப் பகுதிகள் மண்மூடி சாம்பல்மேடுகளாக மாறிஉள்ளன.

இந்தியாவில் புதிய கற்கால சாம்பல் மேடுகள் ஆந்திராமற்றும் கர்நாடக மாநிலங்களில் மட்டுமே அதிகம் கண்டறியப்பட் டுள்ளன. தமிழ்நாட்டில் முதல்முறையாக வேலூர் மாவட்டத்தில் வலசை கிராமத்தில் கண்டறியப்பட் டுள்ளது.

இரும்பை உருக்கிய குழாய்

அகழாய்வின்போது, இரும்பை உருக்க பயன்படுத்திய பகுதியின் சுடுமண் புகைப்போக்கி குழாய் கண்டெடுக்கப்பட்டது. சந்தூர் மலையடிவார பகுதியில், புதிய கற்காலம் தொடங்கி சங்க காலம் வரை மனிதர்கள் தொடர்ந்து வாழ்ந்து வந்ததற்கான பல ஆதாரங்களாக மனிதர்கள் பயன்படுத்திய பட்டை தீட்டப்பட்ட கல் ஆயுதம்,மிகவும் நேர்த்தியாக தயாரிக்கப் பட்ட கருப்பு - சிவப்பு நிறகுவளையின் ஓடுகள், கால்நடைகளின் எலும்புகள், பிராமி எழுத்துக்கு முந்தைய குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள், ஓவியத்துடன் கூடிய பானை ஓடுகள் கிடைத்துள்ளன.

மேலும், சாம்பல் மேடுகளின் நடுவில் உடைந்த நிலையில் பானைகளும், மாட்டின் தாடை எலும்பு, பற்களும் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, இந்தப் பகுதியை முழுமையாக அகழாய்வு செய்தால் புதியகற்காலம் குறித்த பல தகவல்கள்தெரியவரும்.

வலசை கிராம அகழாய்வு பொறுப்பாளர் ஜினு கோஷி கூறும்போது, ‘‘கி.மு 3,000 ஆண்டில் வாழ்ந்தவர்கள் புதிய கற்கால மனிதர்களாக கருதப்படுகின்றனர்.

மத்திய தொல்லியல் துறையினர் 1980-ம் ஆண்டுகளில் இந்த இடத்தை ஆய்வு செய்து புதியகற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருப்பதற்கான குறிப்புகளை பதிவு செய்துள்ளனர். இதை வைத்து எங்கள் மாணவர்களின் பயிற்சிக்காக இந்த இடத்தைதேர்வு செய்து அகழாய்வு நடத்தினோம்.

இதில், தமிழ்நாட்டில் முதல் சாம்பல்மேட்டை கண்டறிந்துள்ளோம். முழுமையாக ஆய்வு செய்த பிறகேமற்ற விவரம் தெரியவரும். சந்தூர்மலையடிவாரத்தின் மற்றொரு பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் ஒரு சாம்பல்மேடு இருக்கிறது.

அதை ஆய்வு செய்ய அனுமதி அளித்தால் மேலும்,பல தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளன. இந்தப் பகுதியில் வாழ்ந்தபுதிய கற்கால மனிதர்கள் எந்த வகையான பயிர்களை பயிரிட்டனர் என்பதை ஆய்வு செய்யவும் திட்டமிட்டுள்ளோம்’’ என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT