பொருளாதாரம், முதலீடு வாய்ப்புகள் தொடர்பான 2 நாள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று தொடங்கியது. இதில், ‘தமிழகத்தில் வர்த்தகம் புரிதல்’ என்ற முதலீட்டாளர்களுக்கான கையேட்டை முதல்வர் பழனிசாமி வெளியிட, தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பெற்றுக்கொண்டார். உடன் தலைமைச் செயலாளர் க.சண்முகம், இந்திய வெளியுறவுத்துறையின் செயலாளர் திருமூர்த்தி, கூடுதல் செயலாளர் ஹரிஷ், என்ஐசிடிஐடி நிறுவன தலைமை செயல் அதிகாரி சஞ்சய் மூர்த்தி, தமிழக தொழில்துறை செயலர் என்.முருகானந்தம், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி - ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் நீரஜ் மித்தல், டிட்கோ நிறுவனத்தின் தலைவர் காகர்லா உஷா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.படம்: க.பரத் 
தமிழகம்

சென்னை, கும்மிடிப்பூண்டி, மறைமலைநகரில் ரூ.1,254 கோடியில் 3 புதிய திட்டங்கள்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்- 10,330 பேருக்கு வேலைவாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை, கும்மிடிப்பூண்டி, மறைமலைநகரில் ரூ.1,254 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள 3 புதிய தொழில் திட்டங்களை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.

பொருளாதாரம் மற்றும் முதலீடு வாய்ப்புகளுக்காக தமிழகம் வந்துள்ள வெளிநாடுகளின் பிரதிநிதிகள் குழுவுடனான 2 நாள் தொடர் நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள ஐடிசிசோழா ஓட்டலில் நேற்று தொடங்கியது. இதை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார். இதில் ஆஸ்திரியா, ருமேனியா, தஜகிஸ்தான், ஜிம்பாப்வே, பல்கேரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள பிரதிநிதிகள், சென்னையில் உள்ள அமெரிக்கா, இலங்கை, ஜப்பான் நாடுகளின் தூதரக அதிகாரிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், தமிழக அரசுக்கும் தேசிய தொழில் வழித்தட மேம்பாடு மற்றும் செயலாக்க கழகத்துக்கும் (என்ஐசிடிஐடி) இடையே சென்னை- பெங்களூரு தொழில் வழித்தட திட்டத்தில் பொன்னேரி பகுதியில் தொழில் மையம் அமைப்பதற்கான மாநில அளவிலான ஆதரவு ஒப்பந்தம் கையெழுத்தானது. முதல்வர் பழனிசாமி முன்னிலையில் தமிழக தொழில் துறைசெயலர் என்.முருகானந்தம், என்ஐசிடிஐடி நிறுவன தலைமை செயல் அதிகாரி சஞ்சய் மூர்த்தி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். தொழில் வழிகாட்டி நிறுவனம் மற்றும்ஜப்பானை சேர்ந்த டெவலப்பர்கள் பூங்கா இடையே ரூ.800 கோடி முதலீட்டில் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஒப்பந்தமும் கையெழுத்தானது.

மேலும், கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் ரூ.504 கோடி முதலீட்டில் 330 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் ஜப்பான் நாட்டின் மிட்சுபா சிகால் நிறுவனம் அமைத்துள்ள தொழிற்பிரிவு, மறைமலைநகர் மல்ரோசாபுரத்தில் ரூ.500 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள கொரியா நாட்டின் ஹானான் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் தொழிற்பிரிவு ஆகியவற்றை முதல்வர் திறந்துவைத்தார். முதல்வரின் அமெரிக்க பயணத்தின்போது ரூ.15கோடி முதலீட்டில் ஒப்பந்தம் போடப்பட்ட ஜோகோ ஹெல்த் நிறுவனம்,தற்போது ரூ.250 கோடி முதலீட்டில்10 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்கும் வகையிலான தொழிற்பிரிவை தொடங்கியுள்ளது. இந்த தொழிற்பிரிவையும் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து டிட்கோ மற்றும் சிப்காட் நிறுவனங்கள் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.217 கோடி முதலீட்டில் தொடங்கப்பட உள்ள தமிழ்நாடு பாலிமர் தொழிற்பூங்கா திட்டத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். ‘தமிழகத்தில் வர்த்தகம் புரிதல்’ என்ற முதலீட்டாளர்களுக்கான கையேட்டை முதல்வர் பழனிசாமி வெளியிட, தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

உலக நாடுகள் பலவற்றில் இருந்து வந்திருக்கும் நீங்கள், தமிழகத்துக்கும், உங்கள் நாட்டுக்கும் நல்ல இணைப்பு பாலமாக திகழ வேண்டும். தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி உங்கள் நாட்டின் அரசு நிறுவனங்களும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளில் தமிழகத்தில் முதலீடு செய்ய நீங்கள் உதவ வேண்டும். சூழல் சுற்றுலா, மருத்துவ சுற்றுலா உள்ளிட்டவற்றில் நாடுகள் இடையே உள்ள ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும். உலகமெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதை வரவேற்க, ‘யாதும் ஊரே’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மின்சார வாகன பூங்கா, வானூர்தி தொழில் பூங்கா, நிதி சேவைகளுக்கான நகரம், பாலிமர் பூங்கா, உணவுப் பூங்கா என முதலீடுகளுக்கான பலவாய்ப்புகள் இங்கு உள்ளன. சேலம்,தூத்துக்குடியில் மத்திய அரசு உதவியுடன் அமையும் மெகா ஜவுளி பூங்காவிலும் நீங்கள் பங்கு பெறலாம். தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் அடுத்தகட்டமாக தொழில் பெரு வழித்தடங்கள் அமையும். இது அனைத்து மாவட்டங்களையும் உள்கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சியில் அடுத்தகட்டத்துக்கு முன்னேற்றும். ஆசியாவிலேயே முதலீட்டுக்கு ஏற்ற சிறந்த இடமாக தமிழகம் உயர்வடைய வேண்டும் என்ற இலக்கை நோக்கி அரசு பயணித்து வருகிறது. இப்பயணத்தில் உங்கள் அன்பும், ஒத்துழைப்பும் வேண்டும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் கே.சண்முகம், மத்திய வெளியுறவுத் துறை செயலர் திருமூர்த்தி, கூடுதல் செயலர் ஹரீஷ், தமிழக தொழில்துறை செயலர் ந.முருகானந்தம், சிட்கோ மேலாண் இயக்குநர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT